கோவை,
பொற்கொல்லர் நலவாரிய செயல்பாட்டை செழுமைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கநகை தொழிலாளர் யூனியன் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்களன்று குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனி நபர்கள் ஏராளமானோர் மனு அளித்தனர். இதில்
கோயமுத்தூர் தங்கநகை தொழிலாளர் யூனியன் (சிஐடியு) சார்பில் இதன் பொதுச்செயலாளர் பி.சந்திரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, கோயமுத்தூரில் பல்லாயிரக்கணக்கானோர் தலைமுறை தலைமுறையாக கைவினை தங்கநகைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலையின் அன்றாட ஏற்ற இறக்கம் காரணமாகவும், இத்தொழிலில் பல்வேறு நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டதாலும், கைவினை தங்கநகை தொழிலாளர்கள் கடும்வேலை இழப்பு மற்றும் வறுமை  போன்ற நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன்காரணமாக சிறுசிறு பட்டறைகளை மூடிவிட்டு அன்றாடக்கூலிக்கு பெரிய மற்றும் சிறிய தங்கநகை தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் இங்கும் கடுமையான உழைப்பு சுரண்டல் நிகழ்த்தப்படுகிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் ஏதும் இங்கு அமலாக்கப்படாமல், ஒவ்வொரு தொழிற்சாலையும் அவர்களுக்கேற்ப சட்டதிட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களின் நிலை இதைவிட மிக மோசமாக உள்ளது. மூன்று நேரமும் உணவு, தங்குமிடம் தந்துவிட்டு வருடத்திற்கு ஒரு முறை உழைப்பிற்கு சம்பந்தமே இல்லாத கூலிகொடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இவ்வாறான தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச்சட்டத்தை கடைபிடிக்க கண்கானிப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எவ்வித சட்ட சமூக பாதுகாப்பின்றி உழைக்கும் தங்க நகை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலிச்சட்டத்தை அமலாக்கி மாதம் ரூ.20 ஆயிரம் என்பதை நிர்ணயம் செய்திடவேண்டும். மந்த நிலையில் செயல்படும் பொற்கொல்லர் நலவாரியத்தை செழுமைப்படுத்த வேண்டும். நலிந்த தங்கநகை தொழிலளார்களின் குடும்பத்திற்கு இலவச வீடுகளை அரசே ஏறபடுத்தி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். முன்னதாக குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க சங்கத்தின் தலைவர் என்.எம்.கண்ணன், பொருளாளர் மருதவேல் மற்றும் பரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.