புதுச்சேரி,
பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் 3 வது தமிழ் மாநில மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. தலைமைக்குழு உறுப்பினர்களாக டி.பிரேமா, என்.ராஜேஸ்வரி, எஸ்.வள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் என்.வத்சலா வரவேற்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். நமது மூவர்ண தேசியக்கோடியை அடையாளப் படுத்தி அளித்ததும் ஒரு பெண்தான் என்பதை நாம் மறந்து விடமுடியாது” என்றார். உழைக்கும் பெண்களைபோதை பொருளாக பார்க்கும் நிலை உள்ளது. சமீபத்தில் ஆளுநர் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் உழைக்கும் பெண்களுக்கு எதிராக பேசியதும் நடந்துகொண்ட விதமும் நாடே அரியும். அரசின் தவறான கொள்கைகளுக்கு மட்டும் பெண்கள்போராட்டம் நடத்துவது மட்டும் இல்லாமல் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் போராட முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பி. அபிமன்யுபிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு உரையாற்றுகையில்,“மத்திய பாஜக ஆட்சியை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தில்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் பங்கேற்க உள்ளோம்” என்றார். பல்வேறு மாநிலங்களில் பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் அகில இந்திய இணைஅமைப்பாளர் வி.பாக்யலஷ்மி,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா, மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, தமிழ் மாநில அமைப்பாளர் பி. இந்திரா அறிக்கையை முன்மொழிந்தார். மாநில நிர்வாகிகள் பங்கஜவல்லி, மல்லிகா உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திரளான பிரதிநிதிகள் மாநாட்டில்பங்கேற்றனர். இந்த மாநாட்டில், தமிழ்நாடு மாநில அமைப்பாளராக பெர்லின் ஆலிஸ்மேரி, இணை அமைப்பளார்கள் சீதாலட்சுமி, கமல சரஸ்வதி, பிரதிபா, மகுடேஸ்வரி உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.