கோவை,
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கோவை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி, அறிவுக்கேணி வாசிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறறு வருகின்றன. இதையொட்டி, கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எழுத்தாளர் செல்வேந்திரன் பேசியதாவது: வாழ்க்கைக்கு உதவும் வாசிப்பு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் வாசிப்புஎன இருவகை வாசிப்புகள் உள்ளன. நாளிதழ்கள், துறைசார் நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள் வாழ்க்கைக்கு உதவும் நூல்களாகும். இலக்கியம், வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை இரண்டாவது வகை வாசிப்பாகும். நாளிதழ் வாசிப்பின் வழியாக மாணவர்கள் தங்களது பொது அறிவு, மொழிப்புலமை, தகவல் தொடர்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடிவதுடன், தங்களுக்கான சலுகைகள், உரிமைகள், வாய்ப்புகள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு முன்னேற முடியும். வாழ்க்கையை சற்று அணுகி நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், அன்றாட கவலைகளிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் சற்றேனும் விடுபடவும் இலக்கிய வாசிப்பு உதவுகிறது. இலக்கியம் நமது எல்லைகளை அழிக்கிறது.

நல்ல வாசகன் உலகக் குடிமகன் ஆகிறான். நேரமின்மை நெருக்கடியால் வாசிக்க குறைவான நேரமே ஒருவருக்குக் கிடைக்கிறது. அதை எவ்வகையிலும் முக்கியத்துவமில்லாத நூல்களை வாசிக்க செலவிட வேண்டியதில்லை. ஓராண்டுக்குள் வாசிக்கவேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக வாசித்து முடிக்கலாம். வாசிக்கும் அறையில் ஒருபோதும் செல்போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை அனுமதிக்க வேண்டாம். அவை வாசிப்பிற்கு இடையூறு உண்டாக்கக் கூடியவை. புத்தகத் திருவிழாக்கள் என்பது தமிழகத்தின் பெரும் பண்பாட்டு நிகழ்வு. ஒவ்வொருவரும் குடும்பமாக வந்து புத்தகங்களை வாங்கிச் செல்லவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கல்லூரி வார்ப்படவியல் துறைத் தலைவர் ம.அரசு, அறிவுக்கேணி ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.