புதுச்சேரி:
சட்டமன்றத்திற்குள் நுழைய முயன்ற நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இது குறித்து தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் அரசின் பரிந்துரையில்லாமல் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், மற்றும் செல்வகணபதி ஆகியோரை கடந்த ஜூலை மாதம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப் பரிந்துரை செய்தார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இதனை ஏற்று மத்திய அரசும் அவர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இவர்கள் நியமனத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்றுக்கொள்ளாததால், ஆளுநரே மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனாலும் இவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில் எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.

தற்போது புதுவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ”உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்லலாம். அவர்களைத் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று ஆளுநர் கிரண் பேடி அறிவித்திருந்தார். இதனையடுத்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்குமாறு மூன்று நியமன எம்எல்ஏக்களும் சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து மனு அளித்தனர். மேலும் சட்டமன்றத்திற்கு வரப்போவதாகவும் அறிவித்தனர்.

புதுவை சட்டமன்றம் திங்களன்று (ஜூலை 16) கூடிய நிலையில், நியமன எம்எல்ஏகளைத் தடுக்க சட்டமன்ற வளாகத்திற்கு டிஜிபி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வளாகத்தின் இரண்டு நுழைவு வாயில்களையும் பூட்டிய அவைக் காவலர்கள் அங்கேயே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். சரியாக 9.45மணியளவில் மூன்று நியமன எம்எல்ஏக்களும் சட்டமன்றத்திற்கு செல்ல வருகை தந்தனர். ஆனால் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்ததால், அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த அவைக் காவலர்களிடம் நீதிமன்ற நகலைக் காண்பித்து, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவைக் காவலர்கள் மூவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.ஒரு மணி நேரம் வரை காத்திருந்த மூவரும், உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.