சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதி மன்றங்களில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. தஞ்சாவூரில் நடந்த சாலை விபத்தில் இறந்த தம்பதிக்கு இழப்பீடு கோரி அவரது மகள்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.  அதன் விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயேந்திரன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் 2009-ம் ஆண்டு அரசு பேருந்து மோதி பலியாகினர். விஜயேந்திரனின் இரு மகள்களும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் ரூ.94 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விஜயேந்திரனின் இரு மகள்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.84 லட்சத்து 39 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மெகா லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு தர ஒப்புக்கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: