திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி,பல்லடம் பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊத்துக்குளி பேரூராட்சியில் வரி உயர்வைக் கைவிடுவதுடன், திடக்கழிவு சேவைக்கட்டணம் விதிப்பு ரத்து செய்யவும், அடிப்படை வசதி கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி பேரூராட்சி கிளைகளின் சார்பில் திங்கள்று ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் தாலுக்கா செயலாளர் சிவசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, வட்ட குழு உறுப்பினர்கள் பெரியசாமி, காமராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்துக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் தற்போது வேலைவாய்ப்பு இன்றி, வருமானம் குறைந்து, கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் வரி உயர்வுகள் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும், பரப்புதோட்டம், பாரதி நகர், செட்டிபாளையம், வேலம்பாளையம் ஆகிய குடிசைப்பகுதி மக்களுக்கும், குன்னம்பாளையம், மாரநாயக்கனூர், வேலம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புற மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், திடக்கழிவு திட்டம் செயல்படுத்தாத நிலையில் புதிய கட்டண விதிப்பு அநீதியானது. ஐஎச்எஸ்டிபி திட்டத்தில் (2008-2009) பாரதிநகர், வேலம்பாளையம், செட்டிபாளையம் ஆகிய குடிசைப்பகுதியில் கட்டப்பட்ட சில வீடுகளுக்கு அரசு மானியத் தொகை இறுதி தவணை இன்னும் வழங்கப்படவில்லை. அதை வழங்குவதுடன் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றம், ரிசர்வ் சைட் பாதுகாப்பு, சுகாதாரம், ஆக்கிரமிப்பு அகற்றம், கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசனிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

பல்லடம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் சொத்து வரி உயர்வைக் கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திங்களன்று பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, உத்தேசித்துள்ள குடிநீர் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கைவிட வேண்டும், பல்லடம் நகரில் தெருவிளக்கு, பழுதடைந்த சாலைகளைச் செப்பனிட்டு சீர்படுத்தவும், என்ஜிஆர் ரோடு சந்தை பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்றவும், நகராட்சி சார்பில் திருமண மண்டபம் கட்டித் தரவும், அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்று பெறப்பட்ட இம்மனுவை அளிக்கும் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கிளைச் செயலாளர்கள் இப்திகார், கிருஷ்ணசாமி, சாந்தாமணி, செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.