சென்னை/அருப்புக்கோட்டை:
சாலை ஒப்பந்த பணிகளை செய்துவரும் எஸ்.பி.கே. குழுமம் மற்றும அந்நிறுவனத்தோடு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைகளில் இதுவரை 100 கோடி ரூபாய் பணமும், சுமார் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்படி குழுமத்தின் நிர்வாகிகளுக்கும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கீழமூடிமன்னார் கோட்டை என்ற ஊரை சேர்ந்த செய்யாத்துரை, அருப்புக்கோட்டை ஆனந்தபுரி நகரில் வசித்து வருகிறார். செய்யாத்துரையும் அவரது மகன் நாகராஜனும் எஸ்.பி.கே அன் கோ என்ற பெயரில், ஒப்பந்த அடிப்படையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சாலைப் பணிகளை எடுத்து செய்துவருகிறார்கள். கல்குவாரி, கட்டுமான நிறுவனம் போன்றவற்றையும் எஸ்.பி.கே அன் கோ குழுமம் நடத்தி வருகிறது.காரியாபட்டி – கிருஷ்ணாபுரம் செல்லும் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான நூற்பு ஆலை இயங்கி வருகிறது. மதுரை மண்டேலா நகரிலிருந்து கப்பலூர் வரை நான்கு வழி இணைப்பு சாலை பணிகளும் இவர்கள் ஒப்பந்தத்தில் தான் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் 5 வாகனங்களில் வந்த 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாலையம்பட்டி பகுதியில் உள்ள செய்யாதுரையின் 4 வீடுகள் மற்றும் அவரது அலுவலகத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டையில் செய்யாத்துரை, அவரது மகன்கள் நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர்.

பாலசுப்பிரமணியனை அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கிளைக்கும் அழைத்துச் சென்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல நூற்பாலை, கல்குவாரி, வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி அதுதொடர்பாகவும் செய்யாத்துரை மற்றும் அவரது மகன் நாகராஜன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை ரிங் சாலை விரிவாக்கப்பணி மட்டுமின்றி மேட்டுப்பாளையம் -கோவை வரையுள்ள சாலை பராமரிப்பு பணி ஆகியவற்றை ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தை 5 வருடங்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள இவரிடம் பல கோடி ரூபாய்க்கு டென்டர் விடப்பட்டுள்ளது.

தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கியச் சாலைகளை 641 கி.மீ தூரத்திற்கு பராமரிப்பு பணி செய்திட ரூ.582 கோடிக்கு டென்டர் எடுத்துள்ளார். திங்கள் கிழமை அதற்கான பூஜை போட ஏராளமான ஏற்பாடுள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பூஜைக்கு வர வேண்டுமென அழைப்பு விடப்பட்டிருந்தது. விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே பூஜை போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், எஸ்.பி.கே நிறுவனத்தில் அதிகாலை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால், பூஜை போடும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.

சென்னையிலும் ரெய்டு
சென்னையிலும் எஸ்பிகே கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் செய்யாத்துறையின் உறவினர் வீடுகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
சென்னை போயஸ் தோட்டத்தில் செய்யாத்துரையின் உறவினர் தீபக் என்பவது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ஆவணங்களும், 24 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குரோம்பேட்டை, பெசன்ட் நகர், அபிராமபுரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேத்தா நகரில் நடைபெற்று வரும் சோதனையில், காரில் பதுக்கப்பட்டிருந்த 25 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

எஸ்பிகே குழுமத்துடன் தொழில் ரீதியாக தொடர்புடையதாக கூறப்படும், டிவிஎச் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ரவிச்சந்திரனின் இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு ரவிச்சந்திரனின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் ஒன்று, எஸ்பிகே குழுமத்தின் பெயரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை பெரம்பூரில் எஸ்பிகே குழுமத்தோடு தொடர்புடைய இடத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 81 கிலோ தங்கமும், தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் என மொத்தம் 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிலம்பாக்கத்தில் எவால்வ் குளோத்திங் கம்பெனி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்பிகே குழும உரிமையாளர் செய்யா துரையின் உறவினரும், சென்னை போயஸ் தோட்டத்தில் வசிப்பவருமான தீபக்கிற்கு சொந்தமான நிறுவனம் என்ற அடிப்படையில் அங்கு வருமான வரி சோதனை நடைபெற்றது.

பசுமைச்சாலை டெண்டர்?
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போட டென்டர் விடப்பட உள்ளதாகவும், அந்த டென்டரில் இந்நிறுவனம் கலந்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக மூத்த அமைச்சர்கள் பலர் இவருடன் நெருங்கிய வணிகத் தொடர்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் பினாமிகளா?
இதில் மூத்த அமைச்சர்கள் என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரும் அடிபடுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சாலை அமைப்பதில் பல்வேறு விதமான முறைகளும் ஊழல்களும் நடந்து வருகின்றன என்பதையும் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி அளவிற்கு தார் ஊழல் நடந்துள்ளது என்பதையும் ஏற்கெனவே தீக்கதிர் நாளேடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது சோதனைக்கு உள்ளாகி இருக்கும் எஸ்.பி.கே. குழுமம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகளே என்று திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“முதல்வரின் உறவினர்களும், பினாமிகளும் அடங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் வழங்கப்படுவதும், ‘சிங்கிள் டெண்டர்’ முறையில் கூட வேலைகள் எதேச்சையாக ஒதுக்கப்படுவதும் ரகசியங்கள். நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களையும் வழங்கிவிட்டு, அதுபற்றி விசாரணை நடத்தினால் தானும் தன் குடும்பமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் நிலை வரும் என்பதால் தான், ஒப்பந்தங்களை விசாரிக்கக் கூடாது என்றே ஒரு சிறப்புப் பிரிவை லோக் ஆயுக்தா சட்டத்தில் புகுத்தி, அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.