ஈரோடு,
சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல், பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா பகுதியில் அமைந்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. கடம்பூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திங்களன்று காலை கடம்பூர் மையப் பகுதியில் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. பேருந்து நிலையம் அருகில் குருநாதி (70) என்ற முதியவரை தூக்கி வீசியது. இதனால் அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், காட்டு யானை அங்கிருந்து அந்தியூர் செல்லும் சாலை அருகில் நின்று கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் துரத்த முற்பட்டனர். 5 மணி நேரம் போராடியும் யானையை விரட்ட முடியவில்லை. அப்பகுதியில் திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றாக திரண்டு யானையை விரட்டி பாதுகாப்பாக வனப்பகுதியில் சேர்த்தனர். காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வன விலங்குகளை ஊருக்குள் வராமல் தடுக்க அகழி மற்றும் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் அலச்சியத்தால் பல பகுதிகளில் பராமரிப்பு இல்லாத காரணத்தால் வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது. வனத்துறையினர் விரைந்து அகழிகளையும், மின் வேலிகளையும் சீரமைத்தால் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வராமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: