திருப்பூர்,
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளின் மதிப்பு நடப்பு நிதியாண்டு 2018 ஏப்ரல் மாதத்தில் இருந்து மூன்று மாத காலத்தில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

முந்தைய 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.11 ஆயிரத்து 272.24 கோடியாக இருந்த ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.8 ஆயிரத்து 859.67 கோடியாக குறைந்துவிட்டது. இது 21.40 சதவிகிதம் சரி வாகும். அதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் ரூ.10 ஆயிரத்து 342.55 கோடியாக இருந்தது, தற்போது ரூ.9 ஆயிரத்து 40.63 கோடியாக (12.59 சதவிகிதம்) வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே ஒப்பீட்டின்படி ஜூன் மாதம் ரூ.9 ஆயிரத்து 979.57 கோடியாக இருந்தது ரூ.9 ஆயிரத்து 202.63 கோடியாக (7.79 சதவிகிதம்) குறைந்துள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், மேற்படி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதி டாலர் மதிப்பில் முறையே 22.78 சதவிகிதம், 16.57 சதவிகிதம் மற்றும் 12.45 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது.

நெருக்கடி அதிகரிக்கும்
தற்போதுள்ள சூழ்நிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், ஆடைத் தொழிலுக்கான இதர மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தி விலை அதிகரித்து, இந்திய ஆயத்த ஆடைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அப்படி விலையை அதிகரித்தால், சர்வதேச சந்தையில் போட்டி அதிகமாக இருக்கும் நிலையில், மற்றநாடுகளின் விலையுடன்போட்டி போட முடியாமல் இந்திய ஏற்றுமதி இன்னும் வீழ்ச்சியை சந்திக்கும் சூழ்நிலையே உருவாகும். ஆனால்மத்திய அரசு இந்திய ஏற்றுமதியை நிலைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆயத்த ஆடை தொழில் மேலும் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலையே உருவாகி உள்ளது. இதனால் வேலைவாய்ப்பும் பாதிப்பைச் சந்திக்கும். அந்நியச் செலவாணியிலும் இழப்பு ஏற்படும் என ஆயத்த ஆடைத் துறையினர் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.