திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சாமி சிலைகள், வெண்கல சிலைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இது கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள சிலைகள், ஆபரணங்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கணக்கிடும் பணியில் ஈடுபட்டார். அப்போது தண்டாயுதபாணி சிலையும், சூலமும் கானாமல் போனது தெரியவந்தது. 1954 ஆம் ஆண்டு பதிவேட்டில், இந்த சிலை மற்றும் சூலம் தொடர்பான விவரங்கள் உள்ளது. சிலையும், சூலமும் கடந்த 1959 ஆம் ஆண்டு ஒரு துறைக்கு வழங்கப்பட்டு உள்ளதாக பதிவேட்டில் மை பேனா மூலம் எழுதப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் ஆனதால் அந்த பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள துறையின் பெயர் சரியாக தெரியவில்லை. எந்த துறையில் இந்த சிலையும், சூலமும் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கடந்த 10 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்பி பொன்னி உத்தரவின் பேரில் செய்யாறு துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை காவலர்கள் அண்ணாமலையார் கோயில் ஆணையர் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: