மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் சீரான பருவமழையை பயன்படுத்தி வனத்தை பசுமையாக்க வறட்சியால் காய்ந்து போன காடுகளில் புதிய மரங்களை வைத்து வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் காடுகளில் இருந்த நீரோடைகள், குளம், குட்டைகள் என அனைத்தும் வறண்டதோடு, மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து போயின. இதன் காரணமாக காட்டுத்தீயும் பரவி காட்டை அழித்தது. வனம் தனது இயற்கையான பசுமையை இழந்த காரணத்தினால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் ஊருக்குள் புகுவது போன்ற பிரச்சனைகளும் அதிகரித்தன. இந்நிலையில், இவ்வாண்டு இவ்வனப்பகுதிகளில் எதிர்பார்த்ததை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைத்ததோடு முன் கூட்டியே துவங்கிய பருவ மழையால் காடுகளில் நிலவி வந்த வறட்சி நீங்கி பசுமை திரும்பி வருகிறது. ஆனாலும், பல ஆண்டுகளாய் நீடித்த போதிய மழையின்மை காரணமாக வனங்களில் உள்ள சில பகுதிகளில் செடி கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து முற்றிலுமாக பொட்டல் காடாக காட்சியளிக்கின்றன. மழை கிடைத்தாலும் இப்பகுதிகள் மீண்டும் உயிர் பிடிக்க இயலாத அளவிற்கு பசுமையற்றே காணப்படுகின்றன. இதனையடுத்து, தமிழ்நாடு உயிர்பன்மை மற்றும் வன பசுமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வறட்சி பாதித்த வனப்பகுதிகளில் மீண்டும் மரங்களை வளர்த்து உயிர் சூழலை உருவாக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வனத்துறை சார்பில் மலை வேம்பு, சந்தன வேம்பு, குமிழ், நாவல், இயல்வாகை, ஆயன், புளி உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இம்மரக்கன்றுகள் அனைத்தும் வனப்பகுதியில் இயற்கையாய் வளரும் வகையிலான மர வகைகள் என்பதோடு, இக்கன்றுகளுக்கான விதைகள் மற்றும் கன்று வளர்ப்பு மண் ஆகியவை அடர்ந்த வனத்தில் இருந்தே எடுக்கப்பட்டதாகும்.

இவ்வாண்டு சரியான அளவில் பருவமழை கிடைக்கும் என்ற எதிர்பார்த்து இவ்வாண்டு துவக்கம் முதலே இம்மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் ஜூலை மாதம் துவக்கம் முதல் வறட்சி பாதித்த வனப்பகுதிகளில் நடப்பட உள்ளது. மேலும், இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறுகையில், வறட்சி பாதித்த காடுகளில் மீண்டும் பசுமையாக்குவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் வகையில் அவர்களது தரிசு நிலங்களில் மரங்கள் வளர்த்து பயன்பெற உதவுகிறோம். வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களில் மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான விளை நிலங்களின் அளவு மற்றும் அவற்றுக்கான நீராதாரம் குறித்து ஆவணங்களை காட்டி எங்களிடம் உள்ள தரமான மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுச் செல்லலாம் என தெரிவித்தார். மழைப்பொழிவு தொடர்வதால் இயற்கை காடுகளின் வளத்தை பெருக்கவும், இதனால் வனம் சார்ந்த உயிரினங்களை காக்கவும் வனத்துறை எடுத்து வரும் இது போன்ற முயற்சிகள் நல்ல பலனை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.