திருச்சிராப்பள்ளி,
திருச்சி பொன்மலை ரயில்வே இடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும் மற்ற நாட்களில் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

ரயில்வே நிர்வாகம் இந்த சந்தையை தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டது. தரைக்கடை ஒன்றுக்கு ரூ.200 என நிர்ணயித்து அங்கு கடை போடும் வியாபாரிகளிடம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், எதிர்ப்பு அதிகமானதை அடுத்து ரூ. 200 லிருந்து ரூ. 175 வரை வசூலிக்கலாம் என தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதித்தது.  அதன்படி தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூ. 175, தலைசுமை வியாபாரிகளுக்கு ரூ. 20, கம்பிகேட் மற்றும் தினசரி கடைகளுக்கு ரூ. 100, இரு சக்கர வியாபாரிகளுக்கு ரூ. 30, மூன்று சக்கர வியாபாரிகளுக்கு ரூ. 40, அனைத்து வகையான வண்டிகளுக்கு ரூ. 50, நான்கு சக்கர வாகன விற்பனையகத்திற்கு ரூ. 150, பிரச்சார வாகனங்களுக்கு ரூ. 200, கனரக வாகன வியாபாரிகளுக்கு ரூ. 300, டிரைலர் வாகனங்களுக்கு ரூ. 500, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5, காருக்கு ரூ. 10 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கும் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், தனியார் ஒப்பந்ததாரர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதையடுத்து ஞாயிறன்று காலை வழக்கம் போல் வாரச்சந்தை கூடியது. வாரச்சந்தை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர் ஊழியர்கள் வாடகை வசூலிக்க தயாராக இருந்தனர். ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் மாநகர காவல்துறையினர் சந்தையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தனியார் ஒப்பந்த ஊழியர்கள் வாடகை வசூலிக்க வந்தனர். உடனே அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்குள் எப்படி வாடகை வசூலிக்கலாம் என ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் உள்பட அனைத்துக் கட்சியினர் ஒப்பந்ததாரர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து ஊழியர்கள் வாடகை வசூலிக்காமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து அனைத்து வியாபாரிகள் தனித்தனியாக பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.