புதுச்சேரி,
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர, மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிப்பது வழக்கம். மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமிக்கும். ஆனால், இம்முறை, மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில பாஜகத் தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

இதற்கு, ஆளும் கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத்தொடர்ந்து, அந்த மூன்று பேரையும் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க மறுத்த சபாநாயகர் வைத்திலிங்கம் பேரவைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. இதை மீறி கடந்த மார்ச் மாதம் 3பேரும் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில் சபை காவலர்கள் வாசலிலேயே தடுத்துநிறுத்தினர்.இந்நிலையில், அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் தங்களை திங்கட்கிழமை (ஜூலை 16) நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். அவர் இந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரின் முடிவுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த நியமன உறுப்பினர்கள் மூன்று பேரும் கூறியதாவது:- எங்கள் நியமனத்தை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாங்கள் சட்டசபைக்குள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, திங்களன்று, நாங்கள் சட்டசபைக்கு செல்ல இருக்கிறோம். ஆனால், எந்த தடை போட்டாலும் அதை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைவோம். பேரவைத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் புதுவை நிர்வாகியான ஆளுநர் உத்தரவையும் பேரவைத் தலைவர் மீறி வருகிறார். இதற்கான பலனை அவர் சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: