பெங்களூரு,
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

கே.ஆர்.எஸ். அணை 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளதால், பாதுகாப்பு கருதி 60 ஆயிரம் கனஅடி உபரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஏற்கெனவே, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உள்ளது. தற்போது ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. கர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்படுள்ள கூடுதல் தண்ணீரால், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் காவிரியில் எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தண்ணீர் வரலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.