அதேபோல சென்னையை மையமாகக் கொண்டு செயல்படுகிற தன்னார்வ நிறுவனமான ‘டெக் பார் ஆல்’ எனும் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் நம்மை அணுகினார்கள். டெக் பார் ஆல் நிறுவனம், நீட் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்து அனுப்புகிற தொண்டினை செய்ய, குறிப்பாக தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அப்படி இந்த முறை 3ஆயிரத்து 36 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு எழுத உதவியிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், தமிழ் வழி கேள்வித்தாளில் 49 கேள்விகள் முற்றிலும் அபத்தமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, தீர்வுகாண்பதற்கு பலரிடம் முயற்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினார்கள். அவர்கள் அளித்த விபரங்களைக் கொண்டு, மாணவர்களுக்கு நீதி பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடுவது என கட்சி முடிவு செய்தது. மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரில் அந்த வழக்கினை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றோம்.

முன்னதாக ராவ் அண்ட் ரெட்டி சட்ட நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்களது உதவியுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். தோழர் பிரசாத் அவர்கள், பெரும் மரியாதைக்குரிய வழக்கறிஞர். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலன் காப்பதற்காக எண்ணற்ற வழக்குகளில் ஆஜராகி, வாதாடி சட்டப் போராட்டத்தை நடத்தி நீதிபெற்றுத் தந்தவர். இந்த வழக்கிற்காக ஆவணங்களை விரிவான முறையில் அவர் தயார் செய்தார். முறையீடு தாக்கல் செய்யும் போது கூட, அதை உடைப்பதற்கு சிபிஎஸ்இ அமைப்பு எப்படியெல்லாம் முயற்சிக்கும் என்பதையெல்லாம் உணர்ந்து சட்டநுணுக்கங்களுடன் விபரங்களை தயார் செய்தார். மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், வாமணன், மோகன் காந்தி போன்றவர்கள் இந்த வழக்கில் மிகப்பெரிய அளவிற்கு பணியாற்றினார்கள்.

வழக்கு நடந்த போது சிபிஎஸ்இ முதலில் எங்களை – இந்த வழக்கை ஏளனமாகத்தான் எதிர்கொண்டது. மத்திய கல்வி வாரியம் என்பதால் சகல அதிகாரங்களையும் கொண்ட அமைப்பு என்ற இறுமாப்பு எப்போதுமே சிபிஎஸ்இ-க்கு இருக்கிறது. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகாரத்துடன் அது நடந்து கொள்கிறது. மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையில் வழக்கு தொடுப்பதற்கு டி.கே.ரங்கராஜனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றெல்லாம் கூட சிபிஎஸ்இ வழக்கறிஞர் வாதிட்டார். அது சிபிஎஸ்இ அமைப்பின் பலவீனத்தின் உச்சக்கட்டத்தை காட்டியது. ஆனால் நீதிபதிகள் மிகத்தெளிவாக இருந்தார்கள். நீதியை நிலைநாட்டினார்கள். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளான சி.டி.செல்வம், பசீர் அகமது ஆகியோர், வழக்கின் துவக்கத்திலேயே, வழக்கு யார் தொடுத்தார்கள் என்பது பிரச்சனையல்ல, வழக்கின் சாரம் உண்மையா இல்லையா என்று சிபிஎஸ்இயை மடக்கினார்கள். முற்றிலும் அபத்தமான முறையில் கேள்வித்தாளை மொழி பெயர்த்திருக்கிறீர்கள்; எந்த ஆங்கில மொழி முறையை பின்பற்றி இப்படி மொழி பெயர்த்தீர்கள்; எந்த அகராதியைப் பயன்படுத்தி இப்படி தப்பும் தவறுமாக மொழி பெயர்த்தீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

இத்தகைய நிலையில்தான், தமிழ்வழி எழுதிய மாணவர்களுக்கு நீதி வழங்கும் விதத்தில், தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் என்ற முறையில் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்கள். உண்மையிலேயே அந்தத் தீர்ப்புக்குப் பிறகு எண்ணற்ற பெற்றோர்கள் என்னிடம் பேசினார்கள். அவர்களுடைய நெகிழ்ச்சியும் கண் கலங்கிய வார்த்தைகளும், நீட்தேர்வு உண்மையிலேயே எந்த அளவிற்கு தமிழக மாணவர்களின் – பெற்றோர்களின் வாழ்வில் மிகக்கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

 தமிழகம் மட்டும் தான் இவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதா, தமிழகம் மட்டும்தான் இத்தனை எதிர்ப்பு தெரிவிக்கிறதா?

இல்லை. தமிழகம் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மேற்குவங்கத்தில் 120 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்பு முற்றும் தவறாக இருக்கிறது. அதை கிளப்புவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தார்கள். இப்போது மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அவர்கள் நம்மிடம் விசாரிக்கிறார்கள். எப்படி இந்த வழக்கை நடத்துவது என்று கேட்கிறார்கள். நாடு முழுவதும் வேறு வேறு பாடத்திட்டங்கள், பயிற்று முறைகள், கல்வித்தரம் என இருக்கிற போது, ஒரே விதமான தேர்வு முறை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்புதான். அங்கும் குமுறல்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

 இந்தியக் கல்வி முறையையே மோடி அரசு முற்றிலும் வணிகமயம் என்ற திசையை நோக்கி நகர்த்திச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) கலைக்கப்படுகிறது. புதிய கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு எதை நோக்கி உந்தித் தள்ளுகிறது என்பதை விளக்குங்களேன்?

இந்தியக் கல்வி முறை என்பது அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் கல்விமுறைதான். குருகுல கல்வி முறை துவங்கி இன்றைக்கு அது மிகப்பெரும் கார்ப்பரேட் கல்விமுறையாக மாறிக்கொண்டிருப்பது வரையிலும் அதைத்தான் பிரதிபலிக்கிறது. குருகுலக் கல்வி முறையிலும் சரி, அதைத்தொடர்ந்து வைதீக கல்வி முறையிலும் சரி, பிராமணீய ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே ஆதிக்கம் செலுத்தியது; பின்னர் புத்தமதம் வந்த பிறகு அந்த மதத்தின் சிந்தனைகள் ஆளும் வர்க்க சிந்தனைகளாக மாறின. அன்றைய கல்வியில் புத்தமத சிந்தனைகளே கோலோச்சின. பின்னர் சமண மதத்தின் சிந்தனைகள் கல்விமுறையில் ஆதிக்கம் செலுத்தின.  அதன்பின்னர் முகலாயர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்யத் துவங்கியபோது, கல்விமுறையில் மிகப்பெரும் மாற்றம் வந்தது. பெரும்பாலான முகலாய மன்னர்கள் ஏற்கெனவே இருந்ததைவிட – மதச்சார்பற்ற முறையிலான ஆட்சியை நடத்தத் துவங்கினார்கள். அதுவே அந்த ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாக இருந்தது. அந்த சிந்தனை அன்றைய கல்வியில் பிரதிபலித்தது. முன்பிருந்ததைவிட கல்விமுறையும் முகலாய ஆட்சியில் மதச்சார்பற்ற தன்மையுடன் கூடியதாக மாறியது.

இதன் பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வந்த பின்பு படிப்படியாக ஆட்சி அவர்கள் கைக்குச் சென்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் கல்விமுறையும் மாறத்துவங்கியது. அந்த கல்விமுறையை பிரிட்டிஷ் கல்வியாளர் சார்லஸ் வுட் என்பவர் வடிவமைத்தார். பிரிட்டிஷ் கல்வி கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான அவர் 1854 ஜூலை 19 அன்று ‘வுட்ஸ் டெஸ்பாட்ச்’ என்ற தலைப்பில் விரிவான திட்டத்தினை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் சமர்ப்பித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அதை விவாதித்து, இந்தியா போன்ற காலனி நாட்டில் எந்தவிதமான கல்வி முறை இருக்க வேண்டும் என்பதை வடிவமைத்து அமலுக்கு கொண்டு வந்தது. இதை த்தொடர்ந்து இந்திய கல்விக்கு 1813ஆம் ஆண்டில் 1 லட்சம் பவுண்ட் நிதியை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒதுக்கியது. 20 ஆண்டுகள் கழித்து 1833ல் 10லட்சம் பவுண்ட் நிதியை இந்திய கல்விக்கு ஒதுக்கியது. முற்றிலும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு ஏற்ற விதத்திலான கல்விமுறை – பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் கல்விமுறை காலனி நாடுகளிலும், இந்தியாவிலும் அமலாக்கப்பட்டது. சார்லஸ் வுட், 100 பரிந்துரைகளை வடிவமைத்திருந்தார். அதில் முதல் பரிந்துரையே, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எந்தவிதமான பாதகமும் வராத விதத்திலும், நமக்கு சாதகமான விதத்திலும் இந்தக் கல்வி முறை இருக்கும் என்று இருந்தது.

அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சிதான் மெக்காலே கல்விமுறை. பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்த போது, மெக்காலே வகுத்தளித்த கல்வித்திட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்தது.  எனவே, இந்திய கல்விமுறையின் வளர்ச்சியை நாம் மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே இந்திய கல்விமுறையை தீர்மானித்திருக்கிறது. இன்றைக்கு படிப்படியாக மாறி ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ட்’ என்று சொல்லப்படுகிற – ‘தயாராக உருவாக்கி வைக்கப்படுகிற அறிவுக்கூர்மை’ என்பது தொடர்பான படிப்புகள் அதை நோக்கிய சிந்தனைகளும் கொண்டதாக இந்திய கல்வி முறை மாறி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆளும் வர்க்கம், இந்தியக் கல்வி முறையை மேலும் தனக்கானதாக வளர்த்தது. 1947க்குப் பிறகு கல்விமுறையை மாற்றுவது தொடர்பாக இந்தியாவின் அன்றைய தலைசிறந்த கல்விமான்களான டாக்டர் ராதாகிருஷ்ணன், லட்சுமண சுவாமி முதலியார் போன்றவர்கள் ஒரு அறிக்கையை உருவாக்கினார்கள். இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. அன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவில் 12சதவீதம்பேர்தான் கல்வி பெற்றிருந்தார்கள். இன்னும் குறிப்பாக உயர் சாதியினர் என்ற நிலையில் இருந்தவர்கள்தான் கல்வி பெறுகிற வாய்ப்பை பெற்றிருந்தார்கள். கிராமப்புற, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி என்பதே இல்லை என்கிற நிலைதான் இருந்தது.
விடுதலை பெற்ற இந்தியாவில் தொழில்கள் வளர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. எனவே பெருவாரியான மக்களுக்கு கல்வி தருவதும், தொழிற்கல்வியை கற்றுத் தருவதும், அதன்மூலம் தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவதும் தேவையாக இருந்தது. இப்படித்தான் 1952ல் இந்திய கல்விமுறையில் மாற்றங்களும் அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கல்வி நிலையங்களும் உருவாகின. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்றதுக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பங்கினை ஆற்றினார். மதிய உணவுத் திட்டம் வந்தது. தமிழகம் முழுவதும் எண்ணற்ற பள்ளிகள் உருவாகின.

தமிழகத்தில் கல்வியை பரவலாக்கியதில் அரசுக்கு மட்டுமல்ல, தனியாருக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அன்றைக்கு இருந்த பல தனியார் முதலாளிகள் ஆங்காங்கே கல்விநிலையங்களை உருவாக்கினார்கள். அன்றைக்கு அவர்கள் உருவாக்கிய போது கல்வியில் லாபம் பார்ப்பது நோக்கமாக இருக்கவில்லை. சேவை நோக்கம் மேலோங்கியிருந்தது. அண்ணாமலை செட்டியார், அழகப்ப வள்ளல் என்று பலரை நாம் குறிப்பிட முடியும். அதேபோல சிறுபான்மை சமூக மக்களின் தேவாயலங்கள், மசூதிகள் சார்பிலும் அவற்றின் நிர்வாகங்கள் சார்பிலும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தென் தமிழகத்தில் நாடார் சமூக மகமைப் பண்டுகள் சார்பில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஆங்காங்கே இருந்த தனியார் தொழில் அதிபர்கள், பிரமுகர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதேபோன்ற நிலை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எண்ணற்ற கல்வி நிலையங்களை நாம் உதாரணமாக சொல்ல முடியும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கல்வி, முதலாளித்துவ வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அனைத்து மக்களுக்குமான கல்வியாக மாற்றப்பட்டது.

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை இன்னும் மாறுதலுக்கு உள்ளாக்கி எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். அதனுடைய வீச்சு மிகவும் குறிப்பிடத்தக்கது. சத்துணவுத் திட்டம் வந்த பிறகு தமிழகத்தில் பீடி உற்பத்தி குறைந்தது என்று கூட புள்ளி விபரத்துடன் ஒரு செய்தி வந்தது. இதன் பொருள் என்னவென்றால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது அதிகரித்தது என்பதுதான். படிப்படியாக இந்த நிலை மாற்றத்திற்கு உள்ளானது. 1990களுக்குப் பிறகு நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் அமலுக்கு வரத்துவங்கிய பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்ப கல்வியும் மாற்றம் பெறுகிறது. கோத்தாரி கமிஷன் அறிக்கை உள்ளிட்டவை புதிய மாற்றங்களை கல்வித்துறையில் செய்யவேண்டுமென வலியுறுத்தின. குறிப்பாக உயர்கல்வி என்பது முற்றிலும் தனியாரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஏற்கெனவே சேவை நோக்கத்துடன் செயல்படுகிற கல்லூரிகளில் புதிய புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்படலாம்; ஆனால் அனைத்தையும் சுயநிதி என்ற முறையில் உருவாக்குங்கள் என வலியுறுத்தப்பட்டது. முன்பு தொழிற்சாலைகளுக்கு பிட்டர்கள் தேவைப்பட்டபோது ஐடிஐகளும் டிப்ளமோ படிப்பு தருகிற பாலிடெக்னிக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் தாராளமயம் வந்த பிறகு புதிய புதிய தொழிற்சாலைகள், உற்பத்தி முறைகள் மாறியதைத் தொடர்ந்து பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இன்றைக்கு 95 சதவீதம் பொறியியல் கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்தான்.

எனவே, இந்தியக் கல்வி முறை என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அந்த காலக்கட்டத்தின் ஆளும் வர்க்கத்தின் உற்பத்தி முறைக்கு உதவி செய்வதாக, ஆளும் வர்க்கத்தின் தேவையை ஈடுகட்டுவதாக, ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கான மூளைகளை உருவாக்குவதாகத்தான் மாறி வந்திருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம்தான் மிகப்பெரிய அளவிற்கு கார்ப்பரேட்மயமாகும் சூழலுக்கு ஏற்ற- எதையும் கேள்வி கேட்காத, தயாராக உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அறிவுக்கூர்மையை உள்வாங்கிக் கொள்கிற புதிய சமூகத்தை உற்பத்தி செய்கிற கல்வி முறையாக மாற்றப்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் நீட் தேர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதிதான் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் புதிய தேவைகளை நிறைவு செய்வதற்காக, யுஜிசி கலைக்கப்பட்டு புதிய கல்வி ஆணையம் உருவாக்கப்படுவதற்கான முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டிருக்கிறது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. போராடுகிறது.

இந்த இடத்தில் சீனாவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு சீனா மிகப்பெரிய அளவிற்கு கல்வியில் கவனம் செலுத்துகிறது. சீன ஆளும் வர்க்கமாக உழைக்கும் வர்க்கம் இருப்பதால் – அது எதிர்காலத்தில் ஒரு சோசலிச சமூகத்தை கட்டமைப்பதை நோக்கி பயணிப்பதால் அனைத்துவிதமான அறிவியல் முன்னேற்றங்களையும் சமூக வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கிற மிகப் பிரம்மாண்டமான வேலையை கல்வித்துறையில் செய்துகொண்டிருக்கிறது. அதுதான் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் மாணவர்களின் கல்வி ஈர்ப்பு மையமாக இன்றைக்கு பிரிட்டன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் – 2020ல் உலகின் தலைசிறந்த கல்வி மையமாக, அனைத்து விதமான கலை மற்றும் அறிவியல் கல்விகளின் மிகச்சிறந்த மையமாக பிரிட்டனையும் முந்திக்கொண்டு சீனா முதலிடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கிற மாணவர்கள் சீனாவுக்கு சென்று பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த உயர் கல்வியைப் பெற முடியும் என்ற நிலையை நோக்கி சீனா சென்றுகொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் ஆளும் வர்க்கம் என்பது பெருமுதலாளிகள் – கார்ப்பரேட்டுகளாக இருப்பதால் அவர்களுக்குத் தேவையான கல்வி முறை ஏழைகளை முற்றிலும் புறந்தள்ளுவதாக, பணம் இருப்பவர்கள் மட்டுமே உயர்கல்வியை பெற முடியும் என்பதாக மாற்றப்படுகிறது.  இந்த நிகழ்ச்சி நிரலைத்தான் கல்வித்துறையில் மோடி அரசு தீவிரமாக அமலாக்கிக் கொண்டிருக்கிறது.  எனவே, ஆளும் வர்க்கத்தின் சிந்தனைதான் ஆளும் சிந்தனையாக இருக்கிறது. ஆளும் வர்க்கமே கல்விச்சிந்தனையை வடிவமைக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிரான போராட்டத்தை உழைக்கும் வர்க்கம் நடத்தியே தீர வேண்டும் என்ற புரிதல் அப்போதுதான் வரும்.  இதைத்தான் ஜெர்மன் தத்துவம் என்ற நூலில் மாமேதைகள் மார்க்ஸ் – ஏங்கெல்சும் சொல்கிறார்கள்: “ஆளும் வர்க்கமானது, அதிகாரத்தின் அனைத்து அம்சங்களையும் கையில் வைத்திருக்கிற வர்க்கமாகவே இருக்கிறது. அதுவே முழுமையாக ஆள்கிறது. ஆளும் வர்க்கமே அந்த வரலாற்று காலக்கட்டத்தின் அனைத்து திசைவழிகளையும் தீர்மானிக்கிறது. அந்த காலக்கட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் கண்கூடாக பார்க்க முடியும். அந்தந்த காலக்கட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்பவர்களாக ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்களே இருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, அந்த உற்பத்தியையும், அந்த சிந்தனையை பகிர்ந்து அளிப்பதையும் அவர்களே ஒழுங்காற்று செய்கிறார்கள். இப்படியாக, ஒவ்வொரு காலக்கட்டத்தின் சிந்தனைகளும், ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன”.

எனவே, இன்றைக்கு ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் மீது தொடுக்கிற பல்வேறு தாக்குதல்களில் ஒன்றாக, அவர்களிடமிருந்து உயர்கல்வி வாய்ப்பை முற்றாகப் பறிப்பது என்ற தாக்குதலையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதற்கான ஒரு கருவிதான் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள்.  எனவே, இதுபோன்ற மோசமான கல்விக் கொள்கையை எதிர்ப்பதும், அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக போராடுவதும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் நடத்துகிற மிகப்பிரம்மாண்டமான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். இதைத்தான் தமிழகத்தில், இந்தியாவில் மக்களுக்கான மாற்றுக் கொள்கையை முன்வைத்து அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி மாபெரும் இயக்கமாக, இடது ஜனநாயக அணியாக நின்று போராடுவது என தீர்மானித்து அந்தப் பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்கிறது. அந்தப் போராட்டம் நிச்சயம் வெல்லும்.

Leave a Reply

You must be logged in to post a comment.