விருதுநகர்,
இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர் கல்விபடிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் காமராஜரின் 116 வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கல்வித் திருவிழாவில் தெரிவித்தார்.

அதில் மேலும் அவர்கூறியதாவது : 2011 இல்உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கு 21 ஆக இருந்தது.தற்போது, இந்தியாவிலேயே அதிகமான மாணவர்கள் உயர் கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. அதாவது 100க்கு 46.94 பேர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.  தமிழகத்தில் 2011 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, 10 முதல் 13 மணிநேரம் மின்சாரம் தடை இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தார். இதையடுத்து, எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் தற்போது வரை 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரியை தொடங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருதுநகர் அரசுத்தலைமை மருத்துவமனையில் 18 கோடியில் தாய்-சேய் நலக் கட்டிடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கியத் தொழிலான பட்டாசுத் தொழிலுக்கு சுற்றுச் சூழல் சட்டத்திலிருந்து விலக்கு பெற தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டத்திற்கென பல கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  இதையடுத்து காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சார்பில் அவருடைய உதவியாளர் மாணிக்கம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதலமைச்சர் வழங்கினார். மேலும், கல்விச் சேவை விருது, மருத்துவச் சேவை விருது ஆகியவற்றையும் வழங்கினார்.

முன்னதாக கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா. பாண்டியராஜன், கடம்பூர் செ.ராஜூ, ராஜலட்சுமி, விருதுநகர் தொகுதி எம்.பி டி.ராதாகிருஷ்ணன், நெல்லை எம்.பி கே.ஆர்.பி.பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா, இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், சண்முகநாதன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். காமராஜர் படத்திற்கு மாலை : மேடையில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் மாலை தூவி மரியாதை செய்தார். அப்போது, அவரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.