அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மராட்டிய மாநிலத்தில் நடத்தப்பட்ட நடைபயணம் உலகின் கவனத்தை ஈர்த்தது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து மாநில அரசு வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் நிலை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை அந்த மாநில அரசே அளித்துள்ள விவரம் தெளிவுபடுத்துகிறது.  மாநில சட்ட மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கடந்த மூன்று மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களில் 122பேர் இழப்பீடு பெற தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.  விவசாயவிளைப் பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலை, கடன் சுமை ஆகியவற்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மராட்டிய மாநிலத்தில் 13 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் வெறும் எண்ணிக்கைகள் தானா? அந்த விவசாயிகள் செய்த தவறு என்ன? உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் வாழவழியின்றி தங்களைத்தாங்களே மாய்த்துக் கொள்வது ஆள்பவர்களின் மனச்சாட்சியை உலுக்க வேண்டாமா? ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக ஆட்சியாளர்கள் வழக்கம்போல வாய்ச்சவடால் அடிப்பதிலேயே குறியாக உள்ளனர். வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் இவர்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட அரை மடங்கு சேர்த்து ஒன்றரை மடங்கு சேர்த்து விலை நிர்ணயிப்போம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினாரா? அண்மையில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை கூட ஒரு ஏமாற்று வேலையேயாகும்.

விவசாயிகள் தற்கொலைக்கு பிரதானமான காரணமாக இருப்பது நாட்டுடமை வங்கிகளின் பயிர்க் கடன் கிடைக்காததால் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி கடனை அடைக்க முடியாமல் இறப்பது ஆகும். விவசாயிகளுக்கு கடன் வழங்க மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் வராக்கடன் என்று அறிவிக்கப்பட்டு பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. வங்கியில் மோசடி செய்பவர்கள் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர். மண்ணை நம்பி வாழும் விவசாயிகளோ மண்ணோடு மண்ணாக புதைந்து கொண்டிருக்கின்றனர். மோடி வகையறா அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய துவங்கிவிட்டார்கள். விவசாயிகளின் வேதனைக்கு முடிவு கட்ட முடியாத இவர்களை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் இந்தியாவில் ஒருகாலத்தில் விவசாயம் இருந்தது என சரித்திரக்குறிப்பு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.