ஜூலை 10. காலை 10.30 மணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் துவங்கிய தருணம். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி வெற்றியை அறிவித்தவாறே அவர் உள்ளே நுழைந்தார். எல்லோரும் ஆச்சரியத்துடன் அந்தத் தகவலை எதிர் நோக்கினார்கள்.  அவர் அறிவித்தார்… நீட் தேர்வு விவகாரத்தில் நமது கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு மகத்தான வெற்றி… தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கும், தவறாகக் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கு மொத்தம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது…

பலத்த கரவொலிக்கிடையே இந்த செய்தியை அறிவித்த போது, அவரது முகத்தில் மிகப்பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும், தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவனின் துள்ளலும் நிறைந்திருந்தது.  தோழர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், மத்தியக்குழு உறுப்பினர், மாநிலங்களவையில் கடந்த சுமார் 10 ஆண்டு காலமாக உழைக்கும் வர்க்க மக்களின் குரலை உரத்து முழங்கும் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் முகம். இந்தச் செய்தி வெளியான அடுத்த கணத்திலிருந்தே அவரது கைப்பேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. செய்தியாளர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எண்ணற்ற பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று ஏராளமானோர் அழைத்து நன்றியை உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். திருவண்ணாமலையிலிருந்து ஒரு தாயார் அவருக்கு போன் செய்து கதறி அழுகிறார்.

மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார். தனது மகளின் மருத்துவ படிப்பு எதிர்காலம் முடிந்து போய்விட்டது என்று குடும்பமே இடிந்துபோயிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் டி.கே.ரங்கராஜன் எம்.பி.யும் தொடுத்த வழக்கின் தீர்ப்பால் மீண்டும் ஒளி பிறந்திருக்கிறது என்று தழுதழுத்த குரலில் பேசுகிறார். நாள் முழுவதும், அடுத்த நாளும் இதே போன்ற அழைப்புகளால் நெகிழ்ந்து போயிருந்த தோழர் டி.கே.ரங்கராஜனிடம் நீட் தேர்வு வழக்கு குறித்த அனுபவத்தையும், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை எந்த திசையை நோக்கி நகர்த்தி செல்கிறது என்பதையும் கேள்விகளாக முன் வைத்தோம். உற்சாகத்துடனும் மிகவும் நுட்பமாகவும் இந்திய கல்வி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை அவர் விளக்கினார். பேட்டி முழுவதும் இந்திய கல்வியை மார்க்சிய நோக்கில் எப்படி புரிந்து கொள்வது என்ற ஒரு பாடமாகவே அமைந்தது.

ஆளும் வர்க்கமானது, அதிகாரத்தின் அனைத்து அம்சங்களையும் கையில் வைத்திருக்கிற வர்க்கமாகவே இருக்கிறது. அதுவே முழுமையாக ஆள்கிறது. ஆளும் வர்க்கமே அந்த வரலாற்று காலக்கட்டத்தின் அனைத்து திசைவழிகளையும் தீர்மானிக்கிறது. அந்த காலக்கட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் கண்கூடாக பார்க்க முடியும். அந்தந்த காலக்கட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்பவர்களாக ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்களே இருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, அந்த உற்பத்தியையும், அந்த சிந்தனையை பகிர்ந்து அளிப்பதையும் அவர்களே ஒழுங்காற்று செய்கிறார்கள். இப்படியாக, ஒவ்வொரு காலக்கட்டத்தின் சிந்தனைகளும், ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன.
– மார்க்ஸ், ஏங்கெல்ஸ்

நீட் வழக்கில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். வழக்கு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்…

நீட் தேர்வை துவக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து வருகிறது.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். இது முற்றிலும் அநீதியான தேர்வு. தமிழக மாணவர்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட மத்திய அரசு பிடிவாதமான முறையில் நீட் தேர்வை அமலாக்கிவிட்டது. தமிழகத்திற்கு எந்த விதி விலக்கும் தரவில்லை. இந்த நிலையில், நடைபெற்ற நீட் தேர்வும்கூட முற்றிலும் தமிழக மாணவர்களை வஞ்சிப்பதாகவே கடந்த 2 ஆண்டுகளும் கடந்துவிட்டன. இந்தாண்டு இன்னும் மோசம். குறிப்பாக தமிழில் படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்கெல்லாம் அடிப்படை என்னவென்றால் மருத்துவப்படிப்பை ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத கனியாக மாற்றுவதுதான். 69 சதவீத இடஒதுக்கீடு என்பதையே அடித்து நொறுக்குவதுதான். இது நமது மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதகம் இழைப்பதாகும்.

நீட் தேர்வை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியா முழுவதும் ஒரே விதமான கல்வி முறை இல்லை. முற்றிலும் ஆங்கில மீடியத்தில் படித்த, கான்வெண்ட் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஒருபுறம்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒருபுறம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஒருபுறம்; மாநிலங்களின் பாடத்திட்டம் ஒருபுறம். எனவே கல்வியில் தரங்கள் வித்தியாசப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்தரம் இல்லை. தமிழகத்திலேயே கூட சென்னை மாநகரில் ஏதேனும் ஒரு பள்ளியில் படிக்கிற மாணவரது தரமும் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள பள்ளியில் படிக்கிற மாணவர்களின் தரமும் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. அதேபோல மத்திய கல்விவாரியத்தின் பாடத்திட்டங்களும் மாநில கல்விவாரிய பாடத்திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் கீழ் இயங்குகிற பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படுகிற என்சிஇஆர்டி அமைப்பின் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களுமே கற்றுத் தரப்படுகின்றன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை இருந்தாலும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் அது இல்லை. இரண்டும் வேறு வேறு விதத்தில் மாணவர்களுக்கு பாடங்களை போதிக்கின்றன. இரண்டின் தரமும் வித்தியாசப்படுகிறது. நீட் தேர்வில் கேள்விகள் முற்றிலும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாடத்திட்டம் மட்டுமல்ல, அதைப் பயிற்றுவிக்கிற ஆசிரியர்களின் பயிற்சி முறையே கூட வேறுபடுகிறது. போதுமான அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பல பள்ளிகளில் இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் ஒரே ஆசிரியரே பாடம் எடுக்கிறார். அவர் இயற்பியல் ஆசிரியராக இருக்கக்கூடும். ஆனால் வேதியியலையும், உயிரியியலையும், தாவரவியலையும் வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் எடுக்கக்கூடிய நிலைமை கூட இருக்கிறது. அந்த அளவில்தான் மாணவர்களுக்கு கல்வித்தரம் என்பதும் கிடைக்கும்.  தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி அமலாக்க வைத்தோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்கிற விதத்தில் தமிழக மாணவர்களுக்கு, இன்னும் குறிப்பாக தமிழ்வழி பயில்கிற மாணவர்களுக்கு பயிற்சி கிடைக்கவில்லை என்பதே உண்மை. இத்தனை குளறுபடிகள் நிறைந்திருக்கிற கல்விச்சூழல் நிலவுகிற நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் எடுக்கிற மதிப்பெண்களை எந்தவிதத்திலும் கணக்கில் கொள்ளாமல் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அதனால்தான் அதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துகிறோம்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக ஏற்கெனவே அனிதா, பிரதீபா என்ற இரண்டு குழந்தைகளை இழந்திருக்கிறோம். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்தியா முழுவதும் 13லட்சத்து 23 ஆயிரத்து 672 மாணவர்கள் எழுதினார்கள். அதில் 1லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தமிழக மாணவர்கள். அவர்களில் குறிப்பாக 24ஆயிரம் பேர் தமிழ்வழி தேர்வு எழுதியவர்கள். இங்குதான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் முற்றிலும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதை புரிந்துகொள்வதே மாணவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால் அத்தனை மாணவர்களும் மதிப்பெண்களை இழந்து, தங்களது மருத்துவப் படிப்பு கனவையும் தொலைத்தார்கள். இத்தகைய நிலையில்தான் இந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது. அதற்கான வழிமுறையை காண வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் நம்மை அணுகினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.