ஹைதராபாத்:
வங்கிகளை ஏமாற்றவும், அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கவும் முதலாளிகள் தயங்கக் கூடாது; இந்த விஷயத்தில் விஜய் மல்லையாவை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் ‘அறிவுரை’ வழங்கியுள்ளார்.ஹைதராபாத்தில் ‘தேசிய பழங்குடியின தொழிலதிபர்கள் மாநாடு’ ஒன்று நடைப்பெற்றுள்ளது. இதில், கலந்துகொண்டு பேசுகையிலேயே ஜூவல் ஓரம் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியிருப்பதாவது:

‘மக்கள் எல்லோரும் விஜய் மல்லையாவை விமர்சிக்கிறார்கள்; ஆனால் விஜய் மல்லையா என்ன செய்தார்? அவர் இங்கேயும், அங்கேயும் வங்கிகளிடமும், அரசியல்வாதிகளிடம், அரசாங்கத்திடமும் சில காரியங்களை செய்தார்; அவர் வங்கிக் கடன்களை வாங்கினார்; அவர் புத்திசாலிகள் சிலரை வேலைக்கு அமர்த்தினார்; அவ்வளவுதான். மற்றபடி அவர் மிடுக்கானவர். அவரைப்போல நாமும் மாற வேண்டும். அவர் போல மிடுக்காவதில் இருந்து மக்களை யார் தடுத்தார்கள்? அரசு அமைப்பில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்று ஆதிவாசி மக்களை சொன்னது யார்? வங்கியாளர்களிடம் செல்வாக்கை காட்டுவதில் இருந்து உங்களை யார் தடுத்தார்கள்? எனவே, நாம் தொழிலதிபர் ஆக வேண்டும்; நாம் புத்திசாலி ஆக வேண்டும்; நாம் மிடுக்காக வேண்டும்; நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்’. இவ்வாறு ஜூவல் ஓரம் பேசியுள்ளார்.இது சர்ச்சையாக மாறியுள்ளது.

பழங்குடியின மக்கள் முன்னேற வேண்டும்; மிடுக்காக வேண்டும்தான் ஆனால், மல்லையா பாணியில் அதைச் செய்யச் சொல்வது, பழங்குடியின மக்களை சிக்கலில் மாட்டிவிடும் சூழ்ச்சியன்றி வேறில்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: