போபால்;
மத்தியப் பிரதேச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு, 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ‘உஜ்ஜைனி மகா காலேஷ்வர் கோயிலில் அமைந்துள்ள சிவனுக்கு’ காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநில தேர்தல் நெருங்குவதையொட்டி, மாநில முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் ‘மக்களின் அருள்பெறும் யாத்திரை’ ஒன்றை துவங்க முடிவு செய்துள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா-தான் இந்த பிரச்சாரத்தைத் துவங்கி வைக்க இருக்கிறார்.
இந்நிலையில்தான், பாஜக-வினருக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்நாத் ‘சிவபெருமானுக்கே கடிதம்’ எழுதியுள்ளார்.‘மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக-வின் மக்கள் விரோத ஆட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஊழல் மற்றும் இளைஞர்களுக்கு வேலையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளன; எனவே, பாஜக-வின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் பொதுமக்கள் வாக்களிக்க சிவன் அருள்புரிய வேண்டும்’ என்று கமல்நாத் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த கடிதம் சிவனுக்கு சென்று சேர்ந்து விட்டதா? அவர் படித்துவிட்டு கமல்நாத்துக்கு பதில் கடிதம் எழுதுவாரா? என்று தெரியவில்லை. ஆனால், பாஜக ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்த- பாஜக-வினர் வழியிலேயே கமல்நாத் எழுதியுள்ள கடிதம் சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.