===மு.சங்கரநயினார்===                                                                                                                                                      கால்பந்து வல்லரசுகள் பலவும் வழியில் வீழ்ந்துவிட கோப்பைக்காண பட்டியலில் இடம் பெற்றிருந்த,1998 ஆம் ஆண்டு கிரீடம் சூடிய பிரான்சும்,அதே உலகக் கோப்பை தொடரில் மூன்றாம் இடம்பிடித்த குரோசியாவும் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் மோதுகின்றன.கடந்த ஜூன் 14 அன்று 21-வது உலகக் கோப்பை போட்டிகள் துவங்கியபோது கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் குரோசியா இடம்பெற்றிருக்கவில்லை.ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி முதல் முறையாக குரோசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதே மிகப்பெரிய சாதனை தான்.இந்த வாய்ப்பு குரோசியாவிற்கு அதிர்ஷ்டத்தில் கிடைத்ததல்ல.கடினமான பயிற்சியின் மூலம் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்தி முன்னேறியுள்ளது.

பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் குரோசியா அணியை மெருகேற்றி வார்த்தெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. குரோசியா அணியின் சிறந்த நடுகள ஆட்டக்காரரான இவான் ராகிட்க்,லூக்கா மோட்ரிக்,முன்களம் மற்றும் நடுகளத்திலும் துணை நிற்கும் மரியோ மான்ஸூகிச், இவான் பெரிசிக்,மாட்ரியோ கொவஸிக் போன்ற வீரர்கள் அந்த அணியின் வெற்றியில் பெரும்பங்கு வகிக்கக் கூடியவர்களாவார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குரோசியா, நாக் அவுட் ,காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் கூடுதல் நேரம் வரை சென்று கடும் போராட்டத்துக்கு பின்னரே இறுதிக்கு முன்னேறியது.இதில் நாக் அவுட் மற்றும் காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் சுற்று வரை சென்று நூலிழையில் வெற்றி பெற்றது. 1998ல் பிரான்சில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த அவர்கள் அன்றைய அரையிறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்கள். தற்போது இறுதிப் போட்டியில் அதே பிரான்சுடன் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ள குரோசியா பிரான்ஸை வீழ்த்தி புதிய வரலாறு படைக்குமா? என்ற புதிருக்கு பொறுத்திருந்து பார்க்கலாம். குரோசியா இறுதிப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் முறையே கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் இணையும்.

பிரான்சு அணியைப் பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டு கையைவிட்டுப் போன உலகக் கோப்பை, 2016ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் வெல்ல முடியாமல் போனது ஆகிய கசப்பான நினைவுகளை மறப்பதற்கு இந்த முறை உலகக் கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற துடிப்புடன் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.காலிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த உருகுவே அணியை வெளியேற்றிய பிரான்சு அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்திடம் வெற்றிகண்டு மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

களத்தின் அனைத்துத் துறைகளிலும் ஜொலிக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பிரான்சு அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். அதற்கேற்றாற்போல் பிரான்சு துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் முதல் தாக்குதல் வீரர் கிரீஸ்மேன், நடுகள ஆட்டக்காரர் பால் போக்பே, உலகக் கோப்பைப் போட்டிகளில் குறைந்த வயதில் கோல் அடித்த என்ற பெருமையை கால்பந்து ஜாம்பவான் பீலேவுடன் பகிர்ந்துகொண்ட கைலியன் எம்பாப்பே,அனைத்து பகுதிகளிலும் தடுப்பு ஆட்டக்காரர் ராபேல் வரானே ஆகியோர் எதிரணியினரின் எத்தகைய வியூத்தையும் முறியடித்து முன்னேறிச் செல்வதில் கில்லாடிகள். 1998ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் கிரீடம் சூடிய பிரான்சு அணிக்குத் தலைமை தாங்கிய டிடியே டெசாம்ஸனின் பயிற்சியின்கீழ் பிரான்சு அணி இதுவரை கணிப்புகளை மெய்யாக்கி வந்துள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்சு அணிக்கு அதிவேக, பலவாந்த ஒரு சிறந்த எதிராளியைத்தான் கிடைத்துள்ளது. 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், 1999ஆம் ஆண்டு யுபேவ கோப்பை இறுதிப் போட்டி, 2008ஆம் ஆண்டு சாம்பியன்ஷ் லீக் இறுதிப்போட்டி ஆகிய போட்டிகளுக்கு சாட்சியாக நின்ற மாஸ்கோவின் புகழ்பெற்ற லுஸ்னிகி மைதானத்தில் கால்பந்து உலகில் வரலாறு படைக்கப்படுமா? அல்லது பழைய வரலாறே தொடருமா? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.