கொல்கத்தா, ஜூலை 13-

“இந்து-பாகிஸ்தான் என்னும் சொற்றொடர் புதிதல்ல. நான் சென்ற ஆண்டு மாநிலங்களவையில் கூறியதுதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப் நாளேட்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக 13ஆம் தேதி தி டெலிகிராப் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு:

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று எச்சரித்ததற்காக, பிரதமர் நரேந்திரமோடியின் சிஷ்ய கோடிகள், இப்போது சீறியெழுகிறார்கள்.

ஆனால் இந்தப் பேர்வழிகள் இதுநாள்வரையிலும் கோபித்துக்கொள்ளாத ஒரு விஷயம் அல்லது அறிந்திராத ஒரு விஷயம் என்னவென்றால், இதேபோன்று பாஜகவைத் தாக்கும் ஒரு சொற்றொடர், சென்ற ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையிலேயே ஒருவரால் கூறப்பட்டிருக்கிறது என்பதேயாகும்.

2017 ஆகஸ்ட் 9 அன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. அப்போது உரைநிகழ்த்தியவர்களில், மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் யெச்சூரி உரையாற்றும்போது அவர் கூறியதாவது:

“நான் என் உரையை முடித்துக்கொள்கிறேன். நீங்கள், ஐஎன்ஏ விசாரணை குறித்துக் கூறினீர்கள். ராயல் கப்பல்படை எழுச்சி குறித்து கூறினீர்கள். அந்தக்காலத்தில் ஒரு பாடல் பாடப்பட்டது. அந்தப்பாடலுடன்தான் நாம் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நாம் அதனை இப்போது மீளவும் பாடவேண்டும், அதன் அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்  என்று நான் நினைக்கிறேன்.  அந்தப் பாடலின் வரிகள், ”மந்திர் மஸ்ஜித் கிர்ஜஹார் நே பாந்த் லியா பகவான் கோ/தர்ட்டி பாண்டி, சகர் பாண்டா, மத் பாண்டோ இன்சான் கோ” (கடவுள் கோவில், மசூதி மற்றும் தேவாலயம் ஆகியவற்றுக்கிடையே பிரிந்திருக்கிறார். நிலமும் கடலும் பிரிந்து இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் பிரிந்திருக்கக்கூடாது.) அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்ற பொருளில் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

எனவேதான், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் நம் இயக்கம் அமைந்திட வேண்டும். இந்தியாவில் ஓர் இந்து-பாகிஸ்தான் உருவாகக் கூடிய விதத்தில் அது இருந்திடக்கூடாது. எனவே அந்தவிதத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறுவோம். …”

மாநிலங்களவைக் குறிப்பேட்டில் இந்தப் பதிவுகள் பதிவுசெய்யப்படும் இடங்களில் “குறுக்கீடுகள்” என்று காணப்படுகிறது.  ஆனால் யெச்சூரி அவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, கீழ்க்கண்டவாறு  மேலும் உரையாற்றியிருக்கிறார்.

“(குறுக்கீடு)….ஆகவே, நாம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, “நவீன தாராளமயக் கொள்கைகளே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும், “மதவெறியே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும் அனுசரித்திடுவோம். நன்றி.” என்று தன் உரையை முடித்திருக்கிறார்.

இவ்வாறு மாநிலங்களவையில் ஓராண்டுக்குமுன்பாகவே யெச்சூரி உரையாற்றி இருக்கிறார்.

அவ்வாறு அவர் கூறிய சொற்றொடர் இப்போதும் அவைக்குறிப்பில் காணப்படுகின்றன. இவ்வாறு அவைக்குறிப்பில் இப்போதும் அந்தச்சொற்றொடர் இருப்பது ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது, புனிதமான மாநிலங்களவை, “இந்து பாகிஸ்தான்” என்னும் சொற்றொடரை நீக்கக்கூடிய அளவிற்கு புண்படுத்தக்கூடிய ஒரு சொற்றொடராகப் பார்க்கவில்லை என்பதேயாகும்.

சீத்தாராம் யெச்சூரியைப் பொறுத்தவரை, அவர் வருந்தவில்லை என்பது மட்டுமல்ல, இவ்வாறு கூறியதற்கான பெருமை (கிரெடிட்) தனக்கு வந்திருக்கவேண்டும், அவ்வாறு தனக்கு வரவில்லையே என்று கருதுவதுபோலவும்  தோன்றியது.

“அவர் (சசி தரூர்) நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். அது சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவுகிறது. அதனால்தான் அந்த வார்த்தை வெகுவேகமாகச் செல்கிறது.  ஆனால், நாடாளுமன்ற அவைக்குறிப்பில் அது இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக நான் உரையாற்றியபோது, இந்த நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய பின்னணியில்  ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியது நான்தான்.”

இவ்வாறு வியாழக்கிழமையன்று கொல்கத்தாவில் சீத்தாராம் யெச்சூர் கூறினார்.

(நன்றி: தி டெலிகிராப், கல்கத்தா, 13.7.2018)

தமிழில்: ச. வீரமணி

 

Leave A Reply

%d bloggers like this: