திருவாரூர்:
வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதியன்று அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பே.சண்முகம் திருவாரூரில் அறிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மத்தியில் ஆளும் நரேந்திரமோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகள் மேல் காட்டுகின்ற அக்கறையை இந்த தேசத்தின் அடித்தளமாக விளங்குகிற விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் மீது காட்டுவதில்லை. கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அறிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக தனது ஆட்சி முடிவிற்கு வரும் நிலையில் சில மோசடி அறிவிப்புகளை வெளியிடுவதோடு 2022-ஆம் ஆண்டிற்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. பாஜக வழியில் ஆட்சி நடத்தும் மாநில அரசும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 09 ஆம் தேதி நாடு முழுவதும் இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 05 ஆம் தேதியன்று தலைநகர் தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி 5 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ளது. இந்த போராட்டங்களை திட்டமிடுவதற்காக விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநாடு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இம்மாதம் 18,19,20 ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது. இதில் அகில இந்திய அளவில் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் விவசாயிகளின் நலன் காக்க தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் விவசாயிகளை வீடுவீடாக சந்தித்து 5 கோடி ரூபாய் போராட்ட நிதியாக வசூல் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர்
தற்போது கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழக அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடக அரசு வழக்கம் போல கூடுதலான உபரி நீரை காவிரியில் திறந்து விட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதே அளவிற்கு மழை நீடித்தால் மேட்டூர் அணை முழு கொள்ளளவும் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி கர்நாடக அரசிடமிருந்து மாதாமாதம் காவிரி நீர் பெறுவதற்கு மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.மேலும் பருவ காலங்களில் மழை நீரை சேமித்து வைப்பதற்கும், வீண் ஆகாமல் தடுப்பதற்கும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் காவிரி ஆற்றில் குறிப்பிட்ட இடங்களில் கதவணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு டெல்டா மாவட்ட நீர் நிலைகளை தமிழக அரசு தீவிரமாக தூர்வாரும் பணிகளை நீர்நிலைகளில் நிறைவேற்ற வேண்டும். இப்பணி நடைபெறாவிட்டால் நதிநீர் வீணாகும் சூழ்நிலை உண்டாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்னும் தூர்வாரப்படாமல் நீர் நிலைகள் புதர் மண்டிக்கிடக்கிறது. இதன் பயனாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேராது. எனவே தமிழக அரசு குறைந்த பட்சம் 1000 கோடி ரூபாயை ஒதுக்கி தூர்வாரும் பணியை மேம்படுத்தி கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த ஆண்டு நீர்வரத்து இருப்பதன் காரணமாக பொது மக்கள், புதுமணத்தம்பதிகள் ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

குரங்கணி தீ விபத்து:
அண்மையில் தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட கொடும் தீ விபத்தில் 23 இளம் உயிர்கள் பலியாகின. இதுகுறித்து விசாரிப்பதற்காக அரசால் நியமிக்கப்பட்ட வருவாய்துறை செயலாளர் அதுல்யாமித்ரா கமிஷன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் குறிப்பாக வனத்துறையினரின் அலட்சியமே இந்த தீ விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் குறித்து சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கோவையில் செயல்படும் ஈசா யோகா மையம் லட்சக்கணக்கான வன நிலப்பரப்பை வளைத்துப் போட்டுள்ளது.மேலும் வன விலங்குகளின் பாதையை மறைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் மீது வழக்கு பதிவு செய்து கார்ப்பரேட் சாமியார் ஜக்கிவாசுதேவ்வை கைது செய்ய வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடவும், நிலங்களை பறிகொடுத்த மக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். சாதாரண மக்களை அச்சுருத்தும் அரசு எந்திரம் இவர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சக்கூடாது.

விவசாயிகள், கிராம மக்களை உள்ளடக்கிய குடிமராமத்துபணியை தமிழக அரசு அறிவித்துள்ளது நல்ல திட்டமாகும். ஆனால் இதனை கோடைகாலத்தில் காலத்தோடு செய்யாமல் தற்போது தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலையில் ஆளும் கட்சியினரை வைத்து அவசரம் அவசரமாக செய்வது அரசு பணத்தை கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துவிடும். திட்டத்தின் நோக்கம் பாழாகிவிடும். எனவே எதிர்காலத்திலாவது குடிமராமத்து பணியை அரசு அறிவித்தபடி முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். சந்திப்பின்போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.