வேலூர்.
வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 23-ஆவது வார்டு சலாமத் நகரில் பாதியில் நிற்கும் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சலாமத் நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள், மணல் கொட்டப்பட்டன. ஆனால், இப்பணி பாதியில் நிற்பதாகவும், இதனால் அவ் வழியே பொதுமக்கள் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாவதாவும் புகார் தெரிவித்தனர். மேலும் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை .இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, சலாமத் நகரில் சாலை அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்ட மணல் திருடு போய்விட்டதாகவும், இதனால்தான் சாலை அமைக்கும் பணியைத் தொடர முடியவில்லை என ஒப்பந்ததாரர் தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.