திருநெல்வேலி;
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை தொடருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாபநாசம் மலைப் பகுதியில் அதிகபட்சமாக 53 மில்லிமீட்டர் மழையும், குண்டாறு அணைப்பகுதியில் 51 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. நகர்புறங்களில் செங்கோட்டையில் 19 மில்லிமீட்டர் மழையும், தென்காசியில் 16.2 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2569 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 905 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. வியாழனன்று அணையின் நீர்மட்டம் 92.10 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 2 அடிஉயர்ந்து வெள்ளிக்கிழமை காலை 94 அடியாக உள்ளது. இதேபோல் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிடும்.

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 107.74 அடியாக உள்ளது.மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து வினாடிக்கு 265 கனஅடி தண்ணீர் வருகிறது. ஆனால் அணையில் இருந்து வினாடிக்கு 625 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சற்று குறைந்து 80 அடியாக உள்ளது.கடனாநதி அணை நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து வெள்ளியன்று 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 69.23 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 114.25 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

Leave A Reply

%d bloggers like this: