சென்னை,
மீன்கள் தேவை அதிகம் இருக்கும் போது பதப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், மீன் உணவை தாராளமாக உண்ணலாம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக, தவறான கருத்து பரப்பப்பட்டதால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் மீன்கள் சேகரித்து சோதனை செய்யப்பட்டது. எந்த பாதிப்பும் இல்லை என்கிற அறிக்கை மட்டுமே வந்துள்ளது. தமிழகத்தில் 70 சதவிகிதம் மீன்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 30 சதவிகிதம் தேவை உள்ளது. அப்படி இருக்க கெமிக்கல் போட்டு பதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு போகும் போது ஐஸ் பெட்டியில் போட்டு கொண்டுச்செல்வார்கள்.

தற்போது குளிரூட்டப்பட்ட வாகனங்கள் உள்ளது. இதில் 10 நாட்கள் வரை பாதுகாக்கலாம். ரசாயனம் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டாம். இது அனைவருக்கும் ஏற்ற அருமையான அத்தியாவசியமான உணவு. வீணான வதந்திகளை பரப்பி மீனவர்கள் நலனில் விளையாட வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மார்க்கெட்டில் மீன்கள் மாதிரி எடுத்து மீனவ பல்கலைக்கழகம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்மீதும் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே நேரடியாக பரிசோதிக்கலாம். சாதாரண டெஸ்ட்தான் அது. மீன் மார்க்கெட்டில் மக்கள் முன்னிலையில் மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து. மீன்கள் சோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவிகிதம் நமது மாநிலத்தில் பார்மாலின் கலப்பு இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ள மீன்கள் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. சிந்தாதிரிப்பேட்டையில் மாதிரி எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள், அங்கு மற்ற மாநில மீன்களும் வருகிறது. அந்த மாதிரி எடுக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கையான மீன் சந்தைக்கு வர வேண்டும் என்பதை வருங்காலத்தில் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிமாநிலத்திலிருந்து இவ்வாறு கொண்டுவரப்படும் மீன்கள் சிக்கினால் என்ன நடவடிக்கை உள்ளதோ அதன் படி கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply