திருவண்ணாமலை,
மனித உரிமைகளை மீறிய திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மனித உரிமை நீதிமன்றத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி. டில்லிபாபு வாக்கு மூலம் அளித்தார்.

சென்னை-சேலம் இடையே விவசாய ஆதாரத்தை அழித்து, 8 வழிச் சாலை அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 277. 3 கிலோ மீட்டர் அமைக்கப்பட உள்ள சாலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 124 கிலோ மீட்டர் வரை அமைய உள்ளது. விவசாயிகளின் 3 போக விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, மரங்கள், நீர்நிலைகள் என, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்தி, சாலை அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளை பாதிக்கும் இச்சாலையை, அரசுகள் எதேச்சதிகாரத்தோடு அமைக்க முற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தானாக முன்வந்து, நிலம் கொடுக்கின்றனர் என்ற பொய்யான கருத்தை முதல்வர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளை அழைத்து கருத்துக் கேட்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி, கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், மாவட்ட காவல்துறை, கூட்டத்தை சீர்குலைக்க நெருக்கடி கொடுத்தது. 25 விவசாயிகள் கைது செய்தது. என்றாலும், கூட்டம் சிறப்பான முறையில் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில், மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், ஜூன் 26 அன்று, விவசாயிகள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது என முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிகழ்வை செய்தியாக பதிவு செய்ய வருகை தந்த கேரளா, மாத்ரு பூமி செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எஸ்.ஆனந்தன், எஸ். ராமதாஸ் ஆகியோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். செங்கம் பகுதியில் கருப்புக்கொடி நிகழ்வில் விவசாயிகளை சந்திக்க வருகை புரிந்த, விவசாயிகள் சங்க மாநில தலைவர்களில் ஒருவரும், அரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, செங்கம் சரக காவல்துறை கண் காணிப்பாளர், சுந்தரமூர்த்தி, தலைமையில் வந்த காவல் படை, டில்லிபாபுவை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கி, கைது செய்தனர்.

டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டில்லிபாபுவை பார்த்து, இழிவாக பேசி இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து அவர் கடந்த 10ஆம் தேதி மனித உரிமைகள் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.இந்நிலையில் வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜராகி பி.டில்லி பாபு, மனித உரிமைகளை மதிக்காமல், அநாகரீகமாகவும், ஆணவமாகவும், தகாத செயலில் ஈடுபட்ட டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மீதும், அவரை தூண்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திவரும் அராஜக போக்கை கைவிட வேண்டும் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.