திருப்பூர்,
திருப்பூரில் பள்ளி மாணவர்கள் போதையில் வந்தது தொடர்பாக அவர்களது பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.

திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்கள், பள்ளியின் அருகில் உள்ள பெட்டி கடைகளில் விற்கப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், வெள்ளியன்று மதியம் அப்பள்ளி மாணவர்கள் 7 பேர் போதை பொருட்களை பயன்படுத்தியதால் வகுப்பறையில் அரை மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதுகுறித்து, வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பின்னர், பள்ளிக்கு வந்த பெற்றோர்களிடம் மாணவர்களின் நிலையை எடுத்து கூறினார். அதைக்கேட்ட, பெற்றோர்கள் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய தலைமை ஆசிரியர் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி குட்கா, பான் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை குறித்து வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அப்பகுதியிலுள்ள கடைகளில் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.