மே.பாளையம்,
பில்லூர் ஆணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நான்காவது நாளாக அணை நிரம்பி வழிகிறது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி பில்லூர் அணையின் மொத்த கொள்ளவான நூறு அடியை எட்டி நிரம்பிய அணையில் இருந்து உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணைக்கான நீர்வரத்து காரணமாக வெள்ளியன்று நான்காவது நாளாக அணை நிரம்பி வழிகிறது.அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கான நீர்வரத்து கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், வெள்ளியன்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் அணையின் நான்கு மதகுகள் வழியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்று நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் இறங்கி குளிப்பதோ அதன் கரையோரத்தில் நின்று துணி துவைப்பதோ கூடாது, பரிசல் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் விடுத்திருந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்கிறது. ஆனால், ஆற்றின் ஆபத்தை உணராமலும் வெள்ள அபாய எச்சரிக்கையினை பொருட்படுத்தாமலும் கரையோரத்தில் நின்று கொண்டு சில பெண்கள் துணிகளை துவைத்து வருவது காணமுடிகிறது. இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆற்றின் கரையோர மக்களுக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து அறிவிப்பு செய்து வருகிறோம். இதனை மீறி ஆற்றில் இறங்குவோருக்கு எச்சரிக்கை செய்து சம்மந்தப்பட்ட இடங்களில் ஊழியர்களை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி காட்டு யானை:
இதற்கிடையே, மேட்டுப்பாளையத்தில் உள்ள சமயபுரம் என்னும் பகுதியில் நீர்மின் நிலையம் அருகே வெள்ளியன்று அதிகாலை காட்டு யானையொன்று ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்டுள்ளது. அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை சிக்கிக்கொண்டது. ஆற்றினுள் சிறிது தூரம் சென்ற யானை தண்ணீரின் வேகத்திற்கு பயந்து நீரில் தத்தளித்தபடியே மீண்டும் ஊர் பகுதியில் உள்ள கரைக்கே திரும்பியது. இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கரையோரத்தில் நின்று கொண்டிருந்த யானையை, மீண்டும் ஆற்றுக்குள் சென்று சிக்கி விடாமலும், திரும்பி ஊருக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் செயல்பட்டு யானையை அருகில் இருந்த மற்றொரு வனப்பகுதி நோக்கி விரட்டினர்.

அதேநேரம், ஆற்று நீரில் சிக்கி தவித்த இந்த ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக சமயபுரம் மற்றும் அருகில் உள்ள ஊர் பகுதிகளில் சுற்றி திரிவதாகவும், இதனை நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்ததாகவும் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள் இந்த யானை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.