புதுதில்லி:
நாட்டின் ‘நம்பர் ஒன்’ முதலாளியான முகேஷ் அம்பானி, இன்னும் துவங்காத ஒரு கல்வி நிறுவனத்திற்கு ‘உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம்’ என்ற தரச்சான்றிதழுடன், ரூ. 1000 கோடி மானியத்தையும் மோடி அரசு வழங்கியுள்ளது.

இதற்கான எதிர்ப்பும், கண்டனங்களும் இன்னும் ஓயாத நிலையில், ஸ்டெர்லைட் முதலாளியான ‘வேதாந்தா’ அனில் அகர்வாலின் துவங்கப்படாத கல்வி நிறுவனத்திற்கும் ‘உலகத்தரம் வாய்ந்த நிறுவனம்’ என்று சான்றிதழ் வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான – 20 இந்திய பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

ஆனால், இந்தக்குழு பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISC), மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ஆகிய 3 அரசு நிறுவனங்கள், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் 6 நிறுவனங்களை மட்டும் ‘Institute of Eminence’ எனப்படும் அந்த உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் என்று தேர்வு செய்தது.

இதனடிப்படையில், அந்த 6 நிறுவனங்களுக்கும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
ஆனால், ‘ஜியோ இன்ஸ்டிடியூட்’ இன்னும் ஏட்டளவில் கூட துவங்கப்படாத நிறுவனம். நாட்டின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, இனிமேல்தான் இந்த நிறுவனத்தைத் துவங்கப் போவதாக கூறப்படுகிறது.எனவே, துவங்காத நிறுவனத்தை சிறந்த நிறுவனமாக அறிவித்து ரூ. 1000 கோடி ஒதுக்கியதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. துவங்கப்படாத நிறுவனத்தை எவ்வாறு தரநிர்ணயம் செய்தார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும் கேள்விக்கு உட்படுத்தினார்கள். ஆனால், முறையான பதில் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் ஆகிய மூன்று விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மட்டும் ஜவடேகர் கூறினார்.
இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் என்ற பட்டியலில், ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலின் ‘வேதாந்தா குழுமம்’ துவங்கவுள்ள கல்வி நிறுவனத்திற்கும் ‘Institute of Eminence’ தரத்தை வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர நிர்ணய சான்றிதழ் கேட்டு, வேதாந்தா குழுமம் ஏற்கெனவே மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், தங்களின் தரத்தை(?) மேம்படுத்திக் கொள்ள 1 மாதம் அவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.