கோயம்புத்துர்;
கோவை மாநகரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்திட 26 ஆண்டுகளுக்கு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனம் கோவை மாநகராட்சியிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்காரணமாக பொதுக்குழாய்கள் அகற்றப்படும்; குடிநீர் வணிகமயமாக்கப்படும் என்ப தால் இது கோவை மாநகர மக்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்கள் தொடர் போராட்டaத்தை நடத்தி வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்கும் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெண்களைத் திரட்டி தொடர்  போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலை யில் வெள்ளி யன்று கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்க்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் உ.வாசுகி தலைமையில் ஊர்வல மாக சென்று மாலை அணிவித்தும், தேங்காய் பழம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் குடிநீர் குழாயைச் சுற்றி ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் மனோன்மணி, மரகதம் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.