மே.பாளையம்,
மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பழமான மங்குஸ் தான் பழ சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில், கல்லார் அரசுதோட்டக்கலை பழப்பண்ணையில் நூற்றுக்கணக்கான மரங்களில் பழங்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து பழுக்க துவங்கியுள்ளன.

நீலகிரி மலையடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கபட்டதாகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷன நிலை நிலவுவதால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக்கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், சிங்கப்பூர் பலா, பச்சைஆப்பிள் உள்ளிட்ட பலஅரிய வகை மருத்துவ குணம்மிக்க பழ வகைகள் இங்கு விளைகின்றன. தற்போது பழங்களின் அரசி என போற்றப்படும் மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியுள்ளதால் இதன் மரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்து பழுக்கத்துவங்கியுள்ளன. இதன் மேல் தோல் பகுதி சற்று தடிமனாகவும், இதனை உடைத்தால் நான்கு அல்லது ஐந்து மிக மென்மையான வெண்மை நிற சுளைகள் காணப்படும். இப்பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியினையும், உடனடி குளுக்கோஸ் சத்தினையும் வழங்கும் என்பதோடு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சுவை மிகுந்த இப்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை விலை போகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மங்குஸ்தான் பழங்கள் காய்த்துள்ள இதே நேரத்தில், அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்துவெளியேறும் குரங்கு கூட்டங்கள் இவற்றை உண்ண பழப்பண்ணைக்குள் புகுந்து தினசரி ஏராளமான மங்குஸ்தான் பழங்களை கடித்து வீணாக்கி வருகின்றன. இவை பழுத்த பழங்களை மட்டும் உண்ணாமல், காய்களையும், பிஞ்சுகளையும் சேர்த்தே பீய்த்து எறிவதால் இப்பழங்களை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மங்குஸ்தான் பழங்கள் வீணாவதை தடுக்கும் வகையில் தற்போது அவற்றை விரைவாக பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 50 முதல் 100 அடி வரை வளரும் மங்குஸ்தான் மரங்களில் ஏறி பழங்களை பறிக்கும் பணியில் பண்ணையாட்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மங்குஸ்தான் சீசன் காலங்களில் சுமார் நாற்பது சதவீதம் வரையிலான பழங்கள்குரங்குகளால் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு விளைச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்த சேதங்களை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அரசு பழப்பண்ணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.