கடலூர்,
கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் சாவடி கெடிலம் சாலை நடுவில் இருக்கும் மின் கம்பங்களை அகற்றி கெடிலம் கரையோடு அந்தச் சாலை இணைக்க வேண்டும். நெல்லிக்குப்பம் சாலையில் சாவடி மற்றும் செம்மண்டலத்தில் போக்குவரத்து ரவுண்டானா அமைக்க வேண்டும், ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வடிகாலில் மேற்புற சிலாப் போட்டு மழைக்காலங்களில் விபத்துகளை தடுக்க வேண்டும். கஷ்டம்ஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், கெடிலம் ஆற்றின் இரு கரையில் இருபுறமும் தார்சாலை அமைத்திடவும், நெல்லிக்குப்பம் சாலையில் செம் மண்டலம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஆகிய இடங்களில் நவீன பஸ் நிறுத்தங்கள் அமைத்து, அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனுமதியற்ற மனைகளை வரை முறைப்படுத்தும் முகம் ஊராட்சிகளில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், என பிரதான சாலையில் நடந்து செல்பவர்களுக்கு நடைபாதை அமைத்திடவும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் உடனடியாக விரிவுபடுத்தவும், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சரிசெய்ய வேண்டும்.

அத்துடன் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுவான இடத்தில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்டப்படுவது, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், நாதமணி நகரில் கெடிலம் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீர்படுத்த வேண்டும். நகராட்சியில் போக்குவரத்தை சீரமைக்க சாலைகள் அகலப்படுத்தப் படவும், நகராட்சி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனைக்கு கட்டணமில்லா தொலைபேசி மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கடலூர் நகர அனைத்து குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், துணைத்தலைவர் டி.புருசோத்தமன் உள்ளிட்டோர் மனுவை அளித்து முதன்மைச் செயலாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கைகளை விளக்கினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.