குறைந்தது இருபது வருடமிருக்காலாம். குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு நடந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டை துவக்கிவைக்க டாக்டர் எம்.கே.பாந்தே வந்திருந்தார்.

அவர் தனது துவக்க உரையில், “நான் எகிப்து நாட்டுக்கு போயிருந்தேன். அங்கு இருக்கும் பிரம்மாண்டமான பிரமிடுகளைப் பார்த்தேன். மிக கச்சிதமாக கட்டியிருந்தார்கள். கற்களை அதன் மீது எப்படி ஏற்றினார்கள் என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு கல்லும் 10 அல்லது 20 டன் எடை இருக்கும். அவ்வளவு உயரத்திற்கு கொண்டுபோய் அடுக்கி இருந்தார் கள். “அந்த கற்கள் சரிந்து விடாமல் இருக்க அவற்றிக்கு இரும்பு ஆணிகளைக் கொண்டு முட்டு கொடுத்திருந்தனர். இன்றுவரை அவை துருப்பிடிக்க வில்லை. பிரமிடுகளைப் பார்த்தேன் அங்கிருந்த அருங்காட்சியகம் சென்றேன். அங்கு சிதிலமாகி விழுந்திருந்த ஆணிகளை வைத்திருந்தார்கள்.பளபளப்போடு இருந்தன. அங்குள்ள குறிப்பு புத்தகத்தில் இந்த ஆணிகள் இந்தியாவிலிருந்து வந்தவை என்று எழுதி இருந்தது. மிக உயர்ந்த இரும்பு கனிமத்தால் செய்யப்பட்டவை.அவை இந்தியாவில் சேலம் அருகில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. இவற்றை அங்குள்ள பழங்குடியின மக்கள் காய்ச்சி இரும்பாக்கி ஆணி தயாரித்துள்ளனர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இந்திய அரசு வேண்டாவெறுப்பாக சேலம் உருக்காலையை கொண்டுவந்தது. மிகவும் உயர்தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது. அந்த சேலம் உருக் காலையை விரிவாக்கம் செய்ய இந்தியா, ஜப்பானிடம் பேசியது. தரமிக்க உருக்கு என்பதால் ஜப்பான் தானே தயாரித்து விற்க பேச்சு நடந்தது. ஊழல் ஆட்சியாளர்களை வளைத்துப் போட்ட ஜப்பான் முதலாளிகள் சேலம் உருக்காலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த தரம் வாய்ந்த கனிமங்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல எண்ணூரில் துறைமுகம், எட்டுவழிச்சாலைக்கு திட்டமிட்டுள்ளனர்.இன்னும் சில ஆண்டுகளில் சேர்வராயன் மலை துகள்களாகி ஜப்பான் உருக்காலைகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகமாறிவிடும். நாம் நிலத்தையும், மரத்தையும் மலையையும் இழந்து நிற்கப்போகிறோமா?

-கருப்பசாமி

Leave a Reply

You must be logged in to post a comment.