திருவனந்தபுரம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ‘இராமாயண மாதம்’ கொண்டாடுவதாக ஊடகங்களும், மதவெறியர்களும் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டது அம்பலமாகி இருக்கிறது.

கேரளத்தில் எப்படியும் அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கும் பாஜக, ஆட்சிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அவதூறுகளையும் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்பு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் மதவெறியர்களால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை ஆர்எஸ்எஸ் கும்பல் கொன்றழித்துள்ளது.இவை பெரும்பான்மை மதவெறி நிகழ்த்திய படுகொலைகள் என்றால், ‘கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா’ உள்ளிட்ட சிறுபான்மை மதத் தீவிரவாத அமைப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவே உள்ளனர். கொச்சின் மகாரஜாஸ் கல்லூரி மாணவர் அபிமன்யு, கடந்த ஜூலை-1 ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது, அதற்கு சாட்சி.

அபிமன்யு படுகொலை கேரளத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படுகொலைகளால் மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சி விடும் என்றே கொலைகாரர்கள் கணக்குப் போட்டனர்.ஆனால், ‘மதவாதம் ஒழியட்டும்’ என்ற, அபிமன்யு சுவரில் எழுதிய முழக்கத்தோடு கேரளமெங்கும் வலுவான பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. மதத்தால் மக்களைத் துண்டாடலாம் என்ற நினைத்த பிரிவினைவாதிகளுக்கு இந்தப் பிரச்சாரம் மற்றுமொரு பின்னடைவாக மாறியது.
இந்நிலையில்தான், பிரச்சாரத்தைச் திசைத் திருப்பும் விதமாகவும், வழக்கமான வன்மத்துடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ‘இராமாயண மாதம்’ கடைப்பிடிக்கப் போவதாக புதிதாக ஒரு புரளியை ஊடகங்களின் உதவியோடு மதவெறியர்கள் தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

மலையாள மனோரமா போன்ற காலம் காலமாக சிபிஎம் மீது விஷம் கக்கும் ஊடகங்களும் அந்த புரட்டர்களோடு சேர்ந்து கொண்டுள்ளன. அதிதீவிர புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில அரைவேக்காடுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வலதுசாரிகள் எடுக்கும் வாந்தியை மகிழ்ச்சியுடன் வழித்துக் குடித்துக் கொண்டிருக்கின்றனர். முகநூல், ட்விட்டர் என சமூகவலைத்தளங்களில் வன்மத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
‘சிபிஎம் ராமாயண மாத சரணம் ஏற்பாடு செய்வதாக சில ஊடகங்களில் நடத்தப்படும் பிரச்சாரம் அடிப்படை இல்லாதது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையையும் மறைத்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.“ஆர்எஸ்எஸ் அமைப்பானது, ‘கர்கடக’ மாதத்தை (ஆடி மாதம்) இராமாயண மாதமாக்கி- அதனை தனது வகுப்புவாத பிரச்சாரத்துக்கும் அரசியல் தேவைகளுக்குமாக துர்பிரயோகம் செய்து வருகிறது; ஆர்எஸ்எஸ்-சின் இந்த தவறான போக்கை அம்பலப்படுத்துவதற்காக சமஸ்கிருத பண்டிதர்களும், சமஸ்கிருத ஆசிரியர்களும் சேர்ந்து ‘சமஸ்கிருத சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது சிபிஎம்-மின் கீழுள்ள அமைப்பல்ல; அது ஒரு சுயேச்சையான அமைப்பு, இந்த அமைப்பும்கூட ‘கர்கடக’ மாதத்தில் இராமாயண வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரியவில்லை; அப்படியிருக்க, சிபிஎம்-தான் இதனை நடத்துவதாக அவதூறு பிரச்சாரம் செய்வதிலிருந்தே மதவெறியர்களின் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகிறது” என்று கொடியேரி பாலகிருஷ்ணன் விரிவாக கூறியுள்ளார்.

ஆனால் புரட்டர்கள் அடங்குவதாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான செய்தி உண்மையல்ல என்றாலும் வெளியான செய்தியை, எதற்கும் கொஞ்சம் பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்று சிலர் பரப்பி விடுகின்றனர். முதல் நாள் செய்தியை வெளியிட்டவர்கள். மறுப்பு செய்தியைக் கண்டுகொள்வதில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒன்று கிடைத்தால் அதை முடிந்தவரை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது நீண்டகாலமாக உள்ளது.
1957-இல் கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் தோழர் இ.எம்.எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் என்று அனைவரும் கூறினர். அப்போது மலையாள மனோரமாவின் முதலாளி மாம்மன் மாப்பிள, ‘அது நடக்காது; ஒரு வேளை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று இ.எம்.எஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்தால் நான் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று வாய்ச்சவடால் அடித்தார்.ஆனால் அவர் போலி விஷத்தைக் குடித்துவிட்டார் போல.. பாவம், 1957-ல் குடித்த விஷத்தால் 2004-இல்தான் அவர் இறந்தார். கம்யூனிஸ்டுகள் மீது எவ்வளவு வக்கிரத்துடன் ஒரு பத்திரிகை முதலாளி இருந்தார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.இன்னொரு முறை இ.எம்.எஸ் கூறினார்: ‘மனோரமா போன்ற பத்திரிகைகள் நம்மைப் பற்றி இப்படியே எழுதட்டும்… மாறாக நம்மைச் சிலாகித்து எழுதினால்தான், எங்கே நாம் தவறு செய்கிறோமோ என்று யோசிக்க வேண்டும்’ என்றார்…

எனவே, முதலாளித்துவ ஊடகங்களும், வலதுசாரி மதவெறியர்களும் தங்களின் பொய்ப்பிரச்சாரங்களால் ஒருபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த முடியாது. மதவெறியை மாய்த்து மக்கள் ஒற்றுமையைக் கட்டுவதற்கான போராட்டத்தை- பொய்ச்சதிகள் அனைத்தையும் முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும்.
– தக்கலை சதன்

Leave a Reply

You must be logged in to post a comment.