அம்பத்தூர்,
ஆவடி பெருநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 29 வார்டுகளில் கிரீன் வாரியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 480 பேர் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி ஒரு நாளைக்கு 362 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனம் ஆண்களுக்கு 7,200 ரூபாயும், பெண்களுக்கு 6,500 ரூபாயும் மாத ஊதியமாக வழங்குகிறது. இவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதற்குரிய எந்த ஆவனத்தையும் அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆவடி பெருநகராட்சி ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆவடி நகராட்சி அலுவலகம் முன் வியாழனன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஒருங்கிணைப்பாளர் ம.பூபாலன், செங்கொடி சங்க மண்டல
செயலாளர் ஆர்.குப்புசாமி, துணைத் தலைவர் எம்.மூர்த்தி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சு.பால்சாமி, நிர்வாகி ஆர்.ராஜன் ஆகியோர் நகராட்சி ஆணையர் மதிவாணனை சந்தித்து பேசினர்.

அப்போது இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் நிறைவடையும் சூழலில் புதிய ஒப்பந்ததாரர் இந்த தொழிலாளர்களையே பணியில் அமர்த்த வேண்டும், தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆணையர் புதிய ஒப்பந்ததாரரிடம் பரிந்துரை செய்வதாகவும், ஊதிய பாக்கியை வரும் புதன்கிழமைக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: