அமெரிக்காவில் மக்களுக்கிடையிலான சமத்துவமின்மையும், வறுமையும்  அதிகரித்திருப்பது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சில் அறிக்கை அளித்ததால் ஆத்திரமடைந்து, டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அதனைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்புப் பிரதிநிதியாக  அமர்த்தப்பட்டிருந்த பிலிப் ஆல்ஸ்டன் அமெரிக்கா குறித்து, இதைமட்டும் கூறவில்லை. அவர், மேலும், அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சிஐஏ, ஜனநாயக முறையில் போராடுபவர்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் கூறுவதையெல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு, அவர்களைக் “குறிவைத்துப் படுகொலை செய்திட வேண்டும்” என்று புதியதொரு உத்தியை வலியுறுத்தி இருப்பதையும் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார். இதனை நாம் படிக்கும்போது, இந்தியாவில், காஷ்மீரில் போராடுகின்ற மக்களின் தலைவர்கள் மத்திய மோடி அரசாங்கத்தால் “குறிவைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட” நிகழ்வுகளும், தூத்துக்குடியில் போராடிய மக்களின் முன்னணித் தலைவர்களும், வீராங்கனைகளும் தமிழகத்தில் ஆளும் மோடியின் எடுபிடி அரசால், தொலைதூரத்திலிருந்தே டெலஸ்கோபிக் துப்பாக்கிகள் மூலமாக “குறிவைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட” நிகழ்வுகளும் நம் நினைவுக்கு வருவதை நாம் தவிர்த்திட முடியாது.

ஆல்ஸ்டன் இவ்வாறெல்லாம் அறிக்கை அனுப்பியிருந்தததன் காரணமாகத்தான் டொனால்டு நிர்வாகம் இவ்வாறு ஆத்திரம் அடைந்தது. இது தொடர்பாக விஜய் பிரசாத், ப்ரண்ட்லைன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம் வருமாறு:]

ஜூனில், அமெரிக்க அரசாங்கம், 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. இவ்வாறு அது விலகிக்கொண்டிருப்பதற்கு, இரு காரணங்களைக் கூறியிருக்கிறது.

முதலாவதாக, மனித உரிமைகள் கவுன்சில், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனப்பகுதிக்குள் வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை  எடுத்தது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் இஸ்ரேல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதை ஐ.நா.தீர்மானங்கள் பல சட்டவிரோதம் என்று முத்திரைகுத்தின. மனித உரிமைகள் கவுன்சில் அந்தத் தீர்மானங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை எடுத்தது. இரண்டாவதாக, அமெரிக்காவில் மிகவும் அதீதமாகவுள்ள சமத்துவமின்மை மற்றும் வறுமை குறித்தும் மனித உரிமைகள் கவுன்சில் ஓர் உயிரோட்டமுள்ள அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. இதனால் அமெரிக்கா மிகவும் ஆத்திரம் அடைந்தது.

ஐ.நா.வின் அமெரிக்கத் தூதரான (திருமதி) நிக்கி ஹெயிலி மனித உரிமைகள் கவுன்சிலை மிகவும் தாக்கினார். இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார். மேலும், அமெரிக்க வறுமை குறித்த அறிக்கையானது, “தவறானதும், அரசியல் உள்நோக்கம் கொண்ட”  ஒன்று என்றும் குறிப்பிட்டார். ஐ.நா. கன்வென்ஷன்களிலிருந்து அமெரிக்கா அவ்வப்போது வெளிநடப்பு செய்வதென்பதை, கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாகவே கொண்டிருக்கிறது. பின்னர் அது எப்போது திரும்பவும் வரும் என்று எவராலும் சொல்லமுடியாது.

பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியர் மற்றும் அதீத வறுமை மற்றும் மனித உரிமைகள் மீதான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி (Special Rapporteur)யாவார். இவர்தான் இந்த அறிக்கையை எழுதினார். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆல்ஸ்டன், அமெரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். பலமுறை ஐ.நா. ஸ்தாபனத்தால் மிக முக்கியமான பணிகளைச் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். 1987 முதல் 1991 வரை பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான ஐ.நா. குழுவிற்காக, முதல் பிரதிநிதியாக இருந்தார். பின்னர், 1991 முதல் 1998 வரை அக்குழுவின் தலைவராகவும் இருந்தார். ஐ.நா. மன்றத்தில், மனித உரிமைகள் மீறல்களை மேற்பார்வையிடுவதற்கான அமைப்பினை மேம்படுத்துவதற்காக,  ஆல்ஸ்டன் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். மனித உரிமைகள் மீது, ஐ.நா. மன்றத்தின் வேலைகளை எப்படி சீர்திருத்தம் செய்திடலாம் என்பது குறித்து அவர் மூன்று முக்கியமான அறிக்கைகளை, 1989, 1993 மற்றும் 1997களில் எழுதினார். இந்த மூன்று அறிக்கைகளும் மற்றும் ஆல்ஸ்டன் ஒரு கல்வியாளராக எழுதியுள்ள கட்டுரைகளும் எந்த அளவிற்கு அவர் ஒரு கூருணர்வுமிக்க பெருந்தகையாளர் என்பதை நமக்குக் காட்டும். இவற்றின் மூலமாக ஆல்ஸ்டன், மிகவும் ஆபத்தானமுறையிலும், மிகவும் இழிவானமுறையிலும் சென்றுகொண்டிருக்கிற உலகத்திலிருந்து ஒரு வித்தியாசமான உலகத்தை ஏற்படுத்திட  விரும்பினார்.

இயக்கங்களில் ஈடுபடுவோரைக் “குறிவைத்துப் படுகொலை செய்தல்”

ஆல்ஸ்டன்  அமெரிக்க அரசாங்கத்தின் கசப்பான மனிதராக எப்போது மாறினார் என்றால் அவர் 2004 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் நீதிமன்றங்களில் வழக்கு எதுவும் தொடுக்கப்படாமல் அரசாங்கத்தால் நேரடியாகவே தாங்கள் விரும்பும்வண்ணம் நபர்களைக் “குறிவைத்துப் படுகொலைகள்” செய்திட்ட நிகழ்வுகளுக்காக ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோதுதான்.  இந்தக் காலத்தில், அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ.-யின் “குறிவைத்துப் படுகொலைகள் மேற்கொள்ளுதல்” என்கிற சிந்தனை குறித்து, ஆய்வு செய்தார். இதனை மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். இவ்வாறு அமெரிக்க ஆட்சியாளர்களின், போராடுகிறவர்களைக் “குறிவைத்துப் படுகொலை செய்” மற்றும் “கண்டதும் சுட்டுக்கொல்” என்கிற உத்தரவுகள் எந்த அளவிற்கு சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள சட்டங்களையும் ஆழமாக மீறியுள்ளன என்று அவர் காட்டியிருந்தார்.

மனித உரிமைகள் கவுன்சிலுக்காக, ஆல்ஸ்டன் தயாரித்த 29 பக்க அறிக்கையானது, அமெரிக்க அரசாங்கத்தை மிகவும் கண்டித்திருந்தது. “எவர் வேண்டுமானாலும், எவரையும் ஒரு பயங்கரவாதி என்று முத்திரைகுத்தி, அவரைக் கொன்றுவிடமுடியும் என்கிற உண்மை குறித்து அமெரிக்க அரசாங்கம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இவ்வாறு கொல்லப்படுவதை, உலகம் முழுவதற்கும் விரிவாக்கிக்கொண்டே அது செல்வதையும் பார்க்க முடிந்தது,” என்று ஆல்ஸ்டன் கூறுகிறார். உலகில் உள்ள எவரை வேண்டுமானாலும் எவ்விதக் கணக்குவழக்குமின்றி கொல்வதற்கு உரிமம் பெற்றதுபோல அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுகளுமோ நடந்துகொள்ளுமானால், இவை உலகில் இதுதொடர்பாக இதுகாறும் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு மிகப்பெரிய சேதாரங்களை ஏற்படுத்திடும்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் இந்த அறிக்கையை ஓரங்கட்டி வைத்தது. ஆல்ஸ்டன் அளித்திட்ட எச்சரிக்கை தொடர்பாகக் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளவில்லை.  இவ்வாறு  அமெரிக்கா நடந்துகொள்வதை உதாரணமாகக் கொண்டு, வேறு பல நாடுகளும் தங்கள் நாடுகளில் போராடுவோருக்கு எதிராக, நேரடியாகப் படுகொலைகளில் ஈடுபடும் நடவடிக்கைகளில் இறங்கின. இந்தியாவில் “என்கவுண்டர் கொலைகள்” இந்த வகையினத்தைச் சேர்ந்தவைகள்தான். உண்மையில், இந்தியாவில் இந்தியக் காவல்துறையும், இராணுவமும் மக்களை எவ்வித ஈவிரக்கமுமின்றி கொன்று குவித்துவருவது குறித்து, 2012இல் ஆல்ஸ்டனுக்குப் பின்னர் ஐ.நா.மன்றத்தில் சிறப்புப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற கிறிஸ்டஸ் ஹெயின்ஸ் வெளிப்படையாகவே கவலை தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் வறுமை, சுகாதாரமின்மை

ஐ.நா. 2017இல் ஐ.நா. அமெரிக்காவில் அதிகரித்து வரும் வறுமை குறித்து கவனத்தைத் திருப்பியது. அமெரிக்காவின் கிராமப்புற அலபாமாவில் “மிக மோசமான முறையில் சுகாதாரமின்மை நிலவுவதையும் அதனால் ஏற்படும் தொத்துநோய்கள்களும்”  என்ற பெயரில் ஓர் ஆவணம் வெளியிடப்பட்ட சமயத்தில், ஐ.நா. மன்றத்தின் அறிக்கை வெளிவந்தது. முன்னதாக, இந்த ஆவணமானது, அலபாமாவில் வசிப்பவர்களுக்குப் போதுமான அளவிற்கு சுகாதார வசதிகள் இல்லை என்றும், குடியிருப்புகளுக்கு அருகிலேயே திறந்தவெளி சாக்கடைகள் இருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது. இவற்றின் காரணமாக, இந்தப் பகுதியில் கொக்கிப்புழு தொத்துநோய் பரவிக்கொண்டிருப்பதாக  ஆய்வுசெய்து கண்டறிந்தது. மேலும் இந்தப் பகுதிகளில் மிக அதீதமான அளவில் மக்கள் வறுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. இவை அனைத்தும் ஐ.நா. மற்றும் ஆல்ஸ்டன் கவனத்தை ஈர்ப்பதற்கு இட்டுச்சென்றன. ‘

ஒரு மாதத்திற்குப்பின்னர், ஆல்ஸ்டனும் அவரது குழுவினரும் இரண்டு வாரங்கள் அலபாமாவில் கழித்தனர். அங்கிருந்த மக்கள் சிறந்ததோர் வாழ்க்கைக்கான வழிமுறைகளை அவர்களிடம் கோரியிருக்கிறார்கள். அங்கிருந்த நிலைமைகள் ஆல்ஸ்டன் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வீடுகளிலிருந்து கழிவுநீர் எவ்வித ஒழுங்குமின்றி வெளியேறி வந்திருக்கிறது. குழந்தைகள் அவற்றின்மீதுதான் விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றன. மின்சாரம் இல்லாத வீடுகளை அல்லது பெயரளவில் மின்சாரம் உள்ள வீடுகளையும், சாக்கடைத் தொடர்புகள் இல்லாத வீடுகளையும் ஆல்ஸ்டன் பார்த்தார். எப்படி  அமெரிக்காவில் மக்கள் “குறிவைத்துத் தாக்கப்படுவதை” வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தேனோ அதேபோன்று இத்தகைய மிக மோசமான வறுமை நிலையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவேன் என்று  ஆல்ஸ்டன் அங்கிருந்த மக்களிடம் கூறியிருக்கிறார்.

ஐ.நா.விற்கு அறிக்கை

பின்னர் ஆல்ஸ்டன் நியூயார்க்கிற்குத் திரும்பியபொழுது, அவர் இவை தொடர்பாக ஐ.நா.விற்கு ஓர் அறிக்கையை அளித்தார். அதில் ஒரு பிரிவில் கூறப்பட்டிருந்ததாவது: “கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதிகளில் நான் நிறையவே பார்த்தேன், கேட்டேன்.  லாஸ் ஏஞ்சல்சில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த பலரைச் சந்தித்தேன். சான் பிரான்சிஸ்கோவில் ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் வீடற்றவர்களை வேறிடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறினார். ஆனால் எங்கே போவது என்று அவர்கள் திருப்பி போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லையாம். தாங்கள் வாங்கிய  அற்பக் கடன்தொகைகளைக் கூட கட்ட முடியாது, தொகையைக் கட்டவில்லை என்றால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று நோட்டீஸ்கள் பெற்றிருந்த ஆயிரக்கணக்கான ஏழைகளை நான் சந்தித்தேன். பல சாக்கடைகளில் கழிவுநீர் செல்லாமல் முழுமையாக நிரம்பி வழிந்ததைப் பார்த்தேன். அவற்றைச் சரிசெய்து, நகரங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது தங்கள் பொறுப்பு என்கிற அறிவே அங்கிருந்த அரசாங்கங்களுக்கு இல்லை. பற்கள் அத்தனையையும் இழந்த மக்களை நான் பார்த்தேன். ஏனெனில் மக்களின் பற்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் சுகாதாரத் திட்டங்கள் எதுவும் அங்கே கிடையாது. அங்கிருந்த குடும்பங்களும், சமுதாயமுமே பல்வேறுவிதமான போதைப் பொருள்களுக்குப் பலியாகி, மக்களின் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்ததையும், காண முடிந்தது. பியூர்டோ ரிக்கோவிற்கு தெற்கே ஒரு மலைக்குப் பக்கத்தில் வாழ்ந்த மக்கள் எவ்விதமான பாதுகாப்புமின்றி வாழ்ந்து வந்ததைப் பார்த்தேன். மழை பெய்யும் காலங்களில் பாதுகாப்பற்ற நிலக்கரிச் சாம்பல்கள் அவர்கள்மீது விழுந்து,  அதன்மூலம் அவர்களுக்கு நோய், அங்கஹீனம் மற்றும் மரணம் ஏற்படுவதையும் காண முடிந்தது.”

ஆல்ஸ்டன் நேரடியாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்தார். மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைக் கடுமையாக வெட்டிக் குறைத்ததையும், பணக்காரர்களுக்கு, சலுகைகள் அளிக்கும் விதத்தில் புதிய வரிக் கொள்கையைக் கொண்டு வந்திருந்ததையும், அதே சமயத்தில் ஏழைகளோ விரக்தியின் எல்லைக்கே சென்று அவதிப்பட்டுக்கொண்டிருப்பதையும் கடுமையாக விமர்சித்தார். இவையெல்லாம் கடுமையான வார்த்தைகளாகும்.

இவைதான் நிக்கி ஹெயிலியை ஆல்ஸ்டனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்திடக்கூடியவிதத்தில் ஆத்திரப்பட வைத்தது.  ஆயினும், ஆல்ஸ்டன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஏழைகளின் பிரச்சனைகளை சமாளித்திட அமெரிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று சென்றமுறை டொனால்டு டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெர்மண்ட் செனட்டர் ஆகியோர் மற்றம் 19 செனட்டர்களுடன் சேர்ந்து, குரல் எழுப்பியுள்ளார்கள். அமெரிக்காவின் அரசாங்கத்தின் கணக்கின்படியே 4 கோடி (40 மில்லியன்) அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகிறார்கள்,  3 கோடி (30 மில்லியன்) அமெரிக்கர்கள் எவ்விதமான சுகாதார இன்சூரன்சும் இன்றி உழன்றுகொண்டிருக்கிறார்கள்.  முதல் மூன்று பணக்காரர்கள் நாட்டின் அடித்தட்டில் உள்ள பாதி மக்கள்தொகையினரின் செல்வத்தைவிட அதிக அளவில் வைத்துள்ள  ஒரு நாட்டில், வறிய நிலையில் வாடும் மக்களுக்கு உரிய சுகாதார வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறோம் என்று சாண்டர்ஸ் தன் சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

டிரம்ப் நிர்வாகம் வறுமை குறித்து ஆல்ஸ்டன் அளித்திட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்த அறிக்கையையே தாக்கியிருப்பதுடன், அதன்காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்தும் விலகிக் கொண்டிருக்கிறது. வறுமையின் விளைவாக உருவாகக்கூடிய தொத்துநோய்களை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் திட்டங்களைத் தீட்டுவதைவிட அத்தகைய நோய்கள் குறித்து மந்திர தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிது. அதைத்தான் அது செய்துகொண்டிருக்கிறது.

(நன்றி: ப்ரண்ட்லைன், ஜூலை 20, 2018)

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.