கல்வியாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் 2018 இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா மீது தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பொது அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்திய உயர்கல்வியை மையப்படுத்தி, அதிகாரத்துவத்தின் கீழ் முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிற அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

“ஒழுங்குபடுத்துகின்ற அமைப்பின் நோக்கத்தை மாற்றுவது”, “கல்வி நிறுவனங்களின் நிர்வாகச் சிக்கல்களில் ஏற்படுகின்ற தலையீடுகளை அகற்றுவது”, மற்றும் “கல்வித் தரத்தை மேம்படுத்துவது” ஆகியவை இந்த சட்டத்தின் நோக்கங்களாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் மேற்கோளிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரைவு மசோதாவை வாசிக்கும் போது, அந்த நோக்கங்களுக்கு முற்றிலும் மாறாக, இந்திய இளைஞர்கள் உயர்கல்வியைப் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, கல்வித் துறையில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் மீது பேரழிவை ஏற்படுத்தும் விதத்திலும் இந்த புதிய சட்ட மசோதா இருப்பது புலனாகிறது.

ஒழுங்குபடுத்துகிற அமைப்பிடமிருந்து நிதி வழங்குகிற அதிகாரங்களைத் திரும்பப் பெற்று அதனை மத்திய அரசிடம் ஒப்படைப்பது; உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது, கண்காணிப்பது, மூடுவது உள்ளிட்ட ஒருதலைப்பட்சமான, முழுமையான அதிகாரங்கள்  போன்ற பணிகள் உயர்கல்வி ஆணையத்திடம் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக, நாட்டின் உயர்கல்வி மீது சித்தாந்த மாற்றங்களை ஏற்படுத்துதல், மிகவும் அவசியமான பன்முகத்தன்மை மற்றும் கல்வித் தரநிலைகளை இழத்தல், கல்விக் கட்டண உயர்வுகள் மற்றும் லாபம் ஈட்டுதல் போன்ற செயல்பாடுகளைத் திணிப்பதாகவே இந்த உயர்கல்வி ஆணைய மசோதா இருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களை, குறிப்பாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரை உயர்கல்வியில் இருந்து ஓரம் கட்டுவதாகவும், பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் அது இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழிப்பதற்குப் பதிலாக, அதனுடைய அணுகல், பன்முகத்தன்மை மற்றும் தரத்தை ஊக்குவிக்கின்ற வகையில் அத்னை வலுப்படுத்துவது அத்தியாவசியத் தேவையாகிறது.

இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா மீது ஆட்சேபணைகளை கீழே குறிப்பிட்டுள்ளவாறு பதிவு செய்து, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, பல்கலைக்கழக மானியக் குழுவையும், அதன் செயல்பாடுகளையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளைப் பெறுகின்ற வகையில், ஆசிரியர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் இதர பங்கேற்பாளர்களிடம் அரசு உடனடியாக கலந்துரையாடலை நடத்திட வேண்டும்.

வரைவு மசோதாவின் மீதான ஆட்சேபணைகள்

பிரிவு 3.6: பல்கலைக்கழக மானியக் குழுவின் தன்னாட்சி அதிகாரத்தின் மீது எந்த வகையிலும் அரசாங்கத்தின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்பதற்காகவே, 1956 பல்கலைக்கழக மானியச் சட்டத்தில், “அரசாங்க அதிகாரிகளாக அல்லது எந்தவொரு மாநில அரசாங்க அதிகாரிகளாக இல்லாத நபர்களிடம் இருந்து மானியக் குழுவின் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட வரைவின் பிரிவு 3.6இல் தலைவர் பதவிக்கான இந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நிபந்தனைகளுக்குட்பட்டு, மத்திய/மாநில அரசுகளின் அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நியமனத்தின் போது அரசாங்கப் பதவியில் அவர் இருக்கக்கூடாது என்ற நிபந்தனை பிரிவு 3.6இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல . . . அதே பிரிவில், அமைச்சரவைச் செயலாளர் தலைமையில், உயர்கல்விச் செயலாளரை உள்ளடக்கியதொரு தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் (ScSc) முடிவின்படி உயர்கல்வி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அரசு ஊழியர்கள் ஆவர். உயர்கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதில் மானியக் குழுவிற்கான தன்னாட்சியை ஒப்புக் கொள்கிற வகையில், அரசின் தலையீடு இல்லாத முறையில் பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாய்ப்புகள், இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு சட்ட மசோதாவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையத்தின் தலைவராக வெளிநாடு வாழ் இந்தியர் இருக்கலாம் என்று வரைவு மசோதாவின் பிரிவு 3.6(b) கூறுகிறது. இந்தியாவின் உயர் கல்வித் துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றோடு தொடர்புடையவராக, தேவையான அனுபவத்துடன், இந்திய அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்ட இந்தியக் குடிமகன் மட்டுமே உருவாக்கப்படுகின்ற ஆணையத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாதது.

பிரிவு 3.8: ஆணையத்தில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக வெளியேற்றுவதற்கான முயற்சிகள் வரைவு மசோதாவின் பிரிவு 3இல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆணையத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பன்னிரண்டிலிருந்து பதினான்காக உயர்த்தப்பட்ட போதிலும், அதில் இருக்கின்ற ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் இரண்டு என்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது. 12 உறுப்பினர்களைக் கொண்ட மானியக் குழுவில் குறைந்தது நான்கு ஆசிரியர்கள் இருப்பதையும், குறைந்தபட்சம் ஆறு பேர் மத்திய/மாநில அரசு அதிகாரிகளாக இல்லாமல் இருப்பதையும் முந்தைய பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் உறுதி செய்திருந்தது. ஆனால் இப்போதைய ஆணையமோ, அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள், பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்துகின்ற குழுக்களின் தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக, ஆசிரியர்களைப் புறந்தள்ளுவதாகவே உருவாக்கப்படுகிறது. கல்வியின் தரத்தை தீர்மானிக்கின்ற பேராசிரியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பாதிக்கும் குறைவானவர்களே மத்திய/மாநில அரசுகளின் அதிகாரிகளாக இருக்க முடியும் என்று மானியக் குழு சட்டத்தில் இருந்த பிரிவு நீக்கப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு கதவைத் திறந்து விடுவதாக இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் “தொழில் துறையின் மூத்தவர்” ஒருவரை ஆணைய உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபருக்கான தகுதி குறித்து எந்தவொரு வரையறையும் குறிப்பிடப்படவில்லை என்பதால் அது ஏற்கத்தக்கதாக இருக்கவில்லை.

பிரிவுகள் 8 மற்றும் 9: வரைவு மசோதாவில் “நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது பணம் சார்ந்தோ, அவ்வாறு இல்லாமலோ, எந்தவொரு ஆராய்ச்சி அல்லது உயர்கல்வி நிறுவனத்திலோ அல்லது வேறு எந்த தொழில் அல்லது நிதி செயல்பாடுகளிலோ  தங்களுக்கிருக்கும் தொடர்பு குறித்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும்” என்பதாக பிரிவு 9.1 இருக்கிறது, வெறுமனே ஆணைய இணையதளத்தில் விளம்பரம் செய்வது மற்றும் பொருத்தமான முடிவுகளை எடுப்பதில் இருந்து தானாக ஒதுங்கிக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள், தன்னலத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளுக்குத் தடையாக இருக்க முடியாது என்பதால், உறுப்பினர்களின் இத்தகைய தொடர்புகளைக் களைவதற்காக வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை.

பிரிவு 12.1: “இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளராக அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரியாக இருக்க வேண்டும்” என்று ஆணையத்திற்கென்று செயலாளர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வரையறையை வரைவு சட்ட மசோதா வழங்குகிறது. ஆணையத்தின் உத்தரவுகள் மற்றும் முடிவுகளைத் தவிர அனைத்துப் பதிவேடுகளும் செயலாளர் அல்லது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அது போன்ற வேறொரு அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும் என்று பிரிவு 14 கூறுகிறது. கொள்கைகள் தொடர்பான அனைத்து கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை அரசாங்கத்தின் விருப்பத்திற்கு விடப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இருப்பை நியாயப்படுத்திய சட்டரீதியான தன்னாட்சியின் அடிப்படையையே தகர்ப்பதாக இருக்கிறது.

பிரிவு 15: கல்வியின் தரம், பல்கலைக்கழகங்களுக்கு அதிக தன்னாட்சியைத் தருவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான வழிமுறையாக இந்திய உயர்கல்வி ஆணைய சட்டம் இருக்கும் என்று கூறப்பட்டாலும், வரைவுச் சட்டத்தின் 15.3 பிரிவு அவற்றின் சீரழிவுக்கு வழிவகுப்பதாகவே இருக்கிறது.

 

15.3(a): பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கம் எதைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வகையில், கற்றலின் விளைவுகளை வரையறுப்பதற்கான அதிகாரம் உயர்கல்வி ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கற்றுக் கொள்ளும் தன்மை, உள்கட்டமைப்புகள் ஆகியவற்றில் பரவலாக மாறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும் உள்ளூர் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால், தெரிவு முறை பாடத் திட்டம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டியாக மாதிரிப் பாடத்திட்டங்களை வடிவமைத்த பல்கலைக்கழக மானியக் குழுவின் முயற்சிகளும் கூட இவ்விஷயத்தில் போதுமானவையாக இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, முதலாமாண்டில் X மற்றும் Y யை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சலுகைகள், பாகுபாடுகள் குறித்த வரலாற்றுக் குறியீடுகள் அல்லது பொருள்சார் குறிப்புகள் கொண்ட வகுப்பறைச் சூழலை கணக்கில் கொள்ளாததாகவே இருக்கிறது. காலம் காலமாக இழப்புகளைச் சந்தித்து வருகின்ற SC / ST / OBC மாணவர்களும், பெருநகரச் சூழலில் இருந்து வருகின்ற மாணவர்களைப் போன்றே கற்றலின் விளைவுகளை அடைந்துவிட வேண்டும் என்று வாதிடுவது, அரசு நிறுவனங்களில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டின் தர்க்கத்திற்கு எதிராக வாதிடுவதாகவே இருக்கும். இறுதியில் அது கற்றல் என்பதாகக் கணக்கிடப்படுகிற ‘தகுதி’யை அடிப்படையாகக் கொண்ட தரம் என்பதை நோக்கி உயர்கல்வியின் எல்லைகளைத் தள்ளுவதாகவே இருக்கும். அந்த தரத்திற்கு உயர முடியாதவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதையோ அல்லது மோசமாகத் தோல்வியடைவதையோ ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இளங்கலை பயிலும் ஒருவருக்கு என்ன மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய சூழல் நிலவுகின்ற வேளையில், பன்முகத்தன்மையை, புதுமைகளைச் சீரழிக்கின்ற இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதல்ல.

15.3(b): கற்பித்தல்/மதிப்பீடு/ஆய்வு ஆகியவற்றிற்கான தரநிலைகளை வரையறுக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழுவைப் போலவே இந்த ஆணையத்திடமும் தரப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால், பல்கலைக்கழக மானியக் குழுவால் குறைந்தபட்சத் தரநிலைகளை மட்டுமே நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆனால் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறிக்கின்ற வகையில் அசாதாரணமான அதிகாரங்கள் இப்போது இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீது பல்கலைக்கழக மானியக் குழு கொண்டிருக்கும் குறைந்தபட்சக் கட்டுப்பாடுகள் என்பது அளவை மீறி விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைக் கட்டிக் காத்திட வேண்டும். ஒழுங்குபடுத்துகிற அமைப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க தங்களுடைய தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கின்ற கட்டமைப்பை உருவாக்குவதே இன்றைய தேவையாக இருக்கிறது.

15.3(c): பல்கலைக்கழகங்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகளை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்வதற்கான அதிகாரம் உயர்கல்வி ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு, அது முற்றிலும் சாத்தியமற்றதாகவும் இருக்கிறது. அரசின் நிதி உதவியைப் பெறுகின்ற கல்வி நிறுவனங்களின் செயல்திறனை ஆராய்ந்து, அவை செயல்படுகின்ற திறனை உறுதிப்படுத்துவது என்பது வெவ்வேறு செயல்திறனுக்கேற்றவாறு வெவ்வேறான நிதி உதவியைகல்வி நிறுவனங்களுக்குத் தருவதிலேயே போய் முடியக் கூடும். இவ்வாறான தரம் பிரிக்கப்பட்ட நிதி வழங்கப்படுவதால், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே முற்றிலும் வேறுபட்ட செயல்திறன் கொண்ட ஒரு சில மேம்பட்ட கல்வி மையங்கள் மட்டுமே மற்றவர்களின் செலவில் உருவாக்கப்படும். அது மட்டுமல்லாது, இவ்வாறான நிதி உதவி பிராந்திய மற்றும் பெருநகர கல்வி நிறுவனங்களுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் வேறுபாடுகளை வலுப்படுத்துவதாகவே அமைந்து விடும். இன்றைய அளவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இருப்பதாகக் கூறப்படுகின்ற 789 பல்கலைக்கழகங்களைப் பற்றி ஆண்டுதோறும் உண்மையான மதிப்பீடுகளைச் செய்வது என்பது ஆணையத்தால் முடியாத காரியமாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறு ஆணையத்திற்கு வழங்கப்படுகின்ற அதிகாரம் என்பது பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு செய்வது மட்டுமல்லாது, அவற்றின் செயல்திறனைத் தண்டனைக்குரியதாக மாற்றுகின்ற, அரைகுறை நடவடிக்கையாகவே இருக்கும்.

15.3(d): ஆய்வுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்பாடுகளைத் தன்வசம் எடுத்துக் கொள்கிற வகையிலான ஏற்பாடுகளை இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு இந்த வரைவு மசோதா செய்து தருகிறது. நிதி தொடர்பான அதிகாரங்களில் இருந்து ஆணையத்தை விலகிக் கொள்வது என்பது, ஆய்வுகளுக்கான போதுமான நிதியைப் பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கின்ற முயற்சியாகவே இருக்கும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு ஏற்றவாறு செயல்பட வைப்பதற்கும், அரசியல் கட்சிகளுடைய கருத்தியலை ஏற்றுக் கொள்கிற விதத்தில் தங்களை நேரடியாக உட்படுத்திக் கொள்ள வைப்பதற்குமே இத்தகைய போக்கு உதவும். ​கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டு, பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு தன்னுடைய முடிவுகளை எடுத்து வந்த பல்கலைக்கழக மானியக்குழுவிடம் நிதி வழங்குவதற்கான அதிகாரம் இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆணையம் சர்வதேசத் தரங்களில் அறிவை உருவாக்கும் வகையில் உதவியாளராக இல்லாமல், அரசியல் கருத்தோட்டத்துடன் ஆய்வுகளுக்கான நிதியை அளிப்பதாகவே இருக்கும். இவ்வாறான ஆணையச் செயல்பாடுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டு வருகின்ற ஆய்வுகளின் தரத்தில் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவிடன் இருந்ததைப் போன்று, இந்த ஆணையத்திடம் ஆய்வுகளுக்கென்று வழங்குவதற்கான  சொந்த நிதி இனிமேல் இருக்கப் போவதில்லை எனவும் தோன்றுகிறது. எனவே, ஆய்வு உதவித் தொகை, ஆய்வுத் திட்டங்கள், பயண மானியங்கள் மூலமாக ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதில் ஆணையத்திற்கென்று தனியாக பங்கு எதுவும் இருக்கப் போவதில்லை.

15.3(e): இந்திய உயர்கல்வி ஆணையமானது பல்வேறு கல்வி நிறுவனங்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள், பலன்களை மதிப்பிடுவதற்கான ஒரு வலுவான அங்கீகார முறையை உருவாக்கவிருக்கிறது. இதன் மூலமாக தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) ஆற்றி வந்த வேலையை இனிமேல் ஆணையம் ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக மாறி விடும். குறைவான வசதிகளுடன் துவங்கப்பட்ட புதிய கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்ற கற்பித்தல் மற்றும் ஆய்வுகளில் ஏற்படுகின்ற முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டை நாக் மதிப்பெண்களோடு இணைப்பதாக இந்த முன்மொழிவு இருக்கிறது. குறைவான நாக் தரம் என்பதை  குறைந்த அளவிலான அரசு நிதி என்பதாக மாற்றுகின்ற இத்தகைய நடவடிக்கை உயர்கல்வியின் முன்னேற்றத்தை மேலும் சாத்தியமற்றதாகவே மாற்றி விடும். ஏற்கனவே 2016 புதிய கல்விக் கொள்கைக்கான சுப்பிரமணியம் குழுவின் அறிக்கையிலும் இதுபோன்ற கொள்கைத் திசையிலேயே பரிந்துரைகளே அளிக்கப்பட்டுள்ளன. வேறு எதனையும் கணக்கில் கொள்ளாது, நிதியுதவிக்கான அடிப்படையாக கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மட்டுமே கணக்கில் கொள்வது என்பது மிக மோசமான சுழற்சியை மட்டுமே உருவாக்கும்.

15.3(g) மற்றும் 15.4(f):  மாணவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில், குறைந்தபட்ச தர நிர்ணயங்களைக் கடைப்பிடிக்கத் தவறுகின்ற நிறுவனங்களை அல்லது குறைந்த காலத்திற்குள் அங்கீகாரத்தைப் பெறத் தவறுகின்ற கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்பதற்கு தெளிவான, விரிவான விவரக்குறிப்புகள் அளிக்கப்பட வேண்டும். போதுமான அளவில் உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் படுதோல்வியுற்றிருக்கும் ஒரு நாட்டில், கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரம் என்பது மிகுந்த எச்சரிக்கையுடன், பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் என்று எளிதாக இனம் காணக்கூடிய கல்வி நிறுவனங்களால் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நடத்தப்படுகிற மோசடி சம்பவங்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைமையில், அரசு நிதி உதவிகளைப் பெறும் கல்வி நிறுவனங்கள் போதுமான அளவில் இல்லாததே, இது போன்ற மோசடி நிறுவனங்களை நோக்கி அதிக பணம் செலவழித்து மாணவர்கள் படையெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களை போதிய காரணங்களின்றி தன்னிச்சையாக மூடுவது என்பது மாணவர்கள் அணுகக்கூடிய வகையில் இருக்கின்ற கல்வியை அவர்களுக்கு கிடைக்காமல் செய்து விடுவது மட்டுமல்லாமல், இந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும், அலுவலர்களையும் இன்னலுக்குள்ளாக்குவதாகவே இருக்கும். இறுதியாகச் சொல்வதென்றால், வழங்கப்படுகின்ற இத்தகைய கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் என்பது ஊழலை வளர்த்தெடுக்கத் துணை புரிவதாகவே அமைந்து விடும்.

15.4(c) மற்றும் 15.4(d): தன்னாட்சி மற்றும் தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமையை வழங்குவதற்கான தரத்தை வரையறுப்பதற்கான அதிகாரம் இந்திய உயர்கல்வி ஆணையத்திடம் வழங்கப்படுகிறது.  ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழுவால் முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை, வரையறுக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் செயல்படுகிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவிலான அரசு நிதி உதவிகளை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களைச் சந்தைப்படுத்துதல், கட்டண உயர்வை அதிகரித்தல், அதிகரிக்கும் பணிப்பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றையே இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தும். மேலும் உயர்கல்வி நிலையங்களில் நுழைபவர்களில் பெரும்பான்மையினராக இருக்கின்ற ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களை அணுகுவதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவதற்கான வழியை வகுப்பதாகவும் இது அமைந்து விடும்.

15.4(g): கல்வித் திட்டங்களின் செயலுறுதி, பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் ஆகியவற்றை அளவிடுவதற்கான விதிமுறைகள், வழிமுறைகளை உருவாக்குவதற்கான பணி உயர்கல்வி ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கின்ற வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய பொருளாதார காரணிகளாலேயே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பை நிர்ணயிக்கின்ற அளவுகோல்கள் கல்விக் களத்தை மட்டும் சார்ந்திருப்பதாக இல்லை. வேலைவாய்ப்புத் திறனை உருவாக்குகின்ற சுமையை உயர்கல்வி ஆணையத்திற்கு மாற்றி, அதனை செயல்திறன் குறியீடாகவோ அல்லது நிதி வழங்குவதற்கான நிபந்தனை என்பதாகவோ வரையறுப்பது நியாயமற்றதாகும்.

15.4(l): கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான நெறிமுறைகளையும், அதற்கான செயல்முறைகளையும் வரையறுப்பதற்கான அதிகாரம், அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்குகின்ற பொறுப்பு ஆகியவை ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் கட்டணம் தொடர்பாக இருக்கின்ற மிக விரிவான பிரிவு (அடுத்தடுத்து பல ஒழுங்குமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன) நன்கொடை மீதான தடை போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனாலும், உயர்கல்வி ஆணையமோ இது தொடர்பாக வெறுமனே அறிவுரை வழங்குவதாக மட்டுமே இருக்கிறது. நிதி உதவிக் கொள்கைகள் என்பவை அரசு தருகின்ற மானியம் என்கிற நிலையிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனியார்களுக்கு வழங்கப்படுகின்ற கடன் உதவிக் கொள்கையாக மாறியிருக்கின்றன. பொதுக் கல்விக்கென நிதி வழங்குகின்ற அரசின் கொள்கையானது, பயன்படுத்துகிற பயனீட்டாளர் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு வழிவிடும் வகையிலேயே இருக்கிறது.

15.7: இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர் கல்வி மற்றும் ஆய்வுகளுக்கான தரங்களை ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பிற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்பதாக வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டமைப்பிற்கான குறைந்தபட்ச தன்னாட்சியை அரசாங்கத்திடம் விட்டுக் கொடுப்பது என்பது, மாணவர் சேர்க்கையை மட்டுமல்லாது, ஒரே தன்மையிலான பாடத்திட்டம் என்று பாடத்திட்டங்களை வடிவமைப்பதையும் அரசாங்கத்திடம் கொண்டு போய் சேர்ப்பதாகவே அமைந்து விடும்.

உயர்கல்வி ஆணைய வரைவுச் சட்டம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சியை வழங்குவதாக் இருக்கும் என்று பிரகடனப்படுத்தப்பட்டாலும், வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் அசாதாரணமான அதிகாரங்களை எந்தத் தடையுமின்றி ஆணையத்திற்கும், மத்திய அரசிற்கும் அளிப்பதாகவே இருக்கின்றன.   ஆலோசனை, விசாரணை, அல்லது ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வது போன்ற எந்தவொரு அதிகாரமும் தனிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கபடவில்லை. நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகின்ற அமைப்பை உயர்கல்வி ஆணையச் சட்டமானது வாயில்காப்பாளர் என்பதாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. சந்தையின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டைத் தன்னிடம் கொண்டிருக்கும் அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, தன்னை சந்தையை நிர்வகிப்பவராகவும், தன்னிடம் உருவாகின்ற ஆற்றலை எளிதில் நிர்வகிக்கக் கூடியவராகவும், தொடர்ந்து அரசிடம் இருந்து மானியம் தேவைப்படுகின்ற நிலையில் இருக்கும் கல்வி நிறுவனங்களை மூடுகின்ற அதிகாரம் கொண்டவராகவும் தன்னை உருவாக்கிக் கொள்கிறது. இந்த புதிய சட்டத்துடனான இணக்கம் என்பது, கல்வி தொடர்பான நிபுணத்துவம் எதுவுமில்லாத, அரசியல் திறமையால் மட்டும் ஆளப்படுகின்ற அமைப்பு ஒன்றிடம் முழுமையாக கீழ்ப்படிந்து போகின்ற நிலைமைக்கு தள்ளிச் செல்வதாகவே இருக்கும்.

பிரிவு 16.1: இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறுவப்பட்ட எந்த உயர்கல்வி நிறுவனமும் அங்கீகாரத்தைப் பெறாமல் பட்டங்களை வழங்க முடியாது. அதற்கும் முன்னராக நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் பெற்றவையாகக் கருதப்படும். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த அங்கீகாரம் அவற்றிடமிருந்து திரும்பப் பெறப்படும். இந்த சட்டப் பிரிவால், நன்கு நிறுவப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் மிக மோசமான நிச்சயமற்ற தன்மை உருவாகி, மூன்று ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட பாடப் பிரிவுகளைப் பயின்று வருகின்ற மாணவர்களின் நலன்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். ஒரு பத்தாண்டு காலத்திற்குள்ளாக இலக்குகளை அடைவதற்கான அங்கீகாரத்தை இந்தச் சட்டப்பிரிவு தருவதால், கல்வி தொடர்பான விஷயங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கி, நிர்வாகிகளுக்கும், ஆசிரிய சமுதாயத்திற்கும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். உடனடியாக கீழ்ப்படிதலை நடைமுறைப்படுத்த விரும்புகின்ற அரசியல் கட்சிக்குப் பயனுள்ளதாகவே, அபராதங்களைச் சுமத்துவதற்கான ஏற்பாடுகளுடன் இருக்கின்ற பிரிவு 23 இருக்கும். நியாயமான வாதங்களைக் கொண்ட கலாச்சாரம் மற்றும் கவனமாகப் பரிசீலித்தல் போன்றவை விதியாக இருக்கின்ற கல்வித் துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு இதனால் எந்தவொரு மதிப்பும் ஏற்படப் போவதில்லை.

பிரிவு 24: 1956 பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டத்தின் பிரிவுகள் 12(e) – (g), மத்திய அல்லது மாநில அரசுகளுக்குத் தேவையான அல்லது அவற்றால் தேடப்படுகின்ற தகவல்கள் தொடர்பாக மானியக் குழு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. ஆனால் இப்போதைய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவில் அது முழுமையாக தலைகீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநில உயர் கல்வி கவுன்சில்களின் தலைவர்கள் / துணைத் தலைவர்களை உறுப்பினர்களாகவும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரைத் தலைவராகவும் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வரைவு மசோதாவின் பிரிவு 24.1 கூறுகிறது. இந்த ஆணையத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் ஆலோசனைக் குழு ஒன்று இருப்பது என்பது, சட்டரீதியான தன்னாட்சியை ஒழிப்பதாகவும், இன்றைய அரசின் அரசியல் நோக்கங்களுக்கு கீழ்ப்படுத்துகின்ற வகையில் உயர்கல்வியை மாற்றுவதற்கான வழியை வகுப்பதாகவுமே இருக்கும்.

பிரிவு 26: ஏற்கனவே பாராளுமன்றச் சட்டங்கள் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கின்ற பல்கலைக்கழகங்களைத் திறம்பட அழித்துவிடக் கூடியதாக இருக்கின்ற இந்த வரைவுச் சட்டம் எல்லை மீறிய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருப்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் பன்முகத் தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் இருக்கும் வகையில், மாறுபட்ட வழிகளில் அவை வளர்வதை ஏற்கனவே இருந்து வருகிற பாராளுமன்றச் சட்டங்கள் ஊக்குவித்து வந்திருக்கின்றன. மேலும் உள்ளூர் மற்றும் தேசிய சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் தனித்துவத்தையும், பொருத்தத்தையும் அவை பராமரித்து வந்திருக்கின்றன. அவ்வாறில்லாமல், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் ஒரே தன்மையுடையனவாக மாற்றுவது பொறுப்பான உயர்கல்வியை உருவாக்காது. தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தரநிலைகளை நிர்வகிக்கின்ற ஒழுங்கு விதிகள் மத்திய அரசின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா பிரிவு 29இல் குறிப்பிடப்பட்டுள்ளதால், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் இனிமேல் அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே இருக்கும்.

கடந்த எழுபதாண்டுகளாக இந்திய மக்கள் தாங்கள் செலுத்திய வரிப் பணத்தில் இருந்து கல்வித் துறையில் செய்திருக்கும் அனைத்து முதலீடுகளையும் இல்லாமல் செய்யும் வகையிலான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதையே இந்த வரைவு மசோதா தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருக்கிறது. புதிய ஆணையத்தை நியமித்து, அதனுடைய ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் இருந்து நிதியுதவி அளிக்கின்ற பொறுப்பை நீக்குவது என்பது, இந்த 2018 வரைவு மசோதாவில் கூறப்பட்டிருப்பது போல மாறி வருகின்ற உயர்கல்வியின் முன்னுரிமைகளாக இருக்க முடியாது. பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்த நிதியுதவிகளை அளிக்கின்ற பொறுப்பு இப்போது மத்திய அரசாங்கத்திடம் முற்றிலுமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படுவதன் மூலம், அரசு நிதியைப் பெறுவதற்கான முன்நிபந்தனையாக பல்கலைக்கழகங்களிடமிருந்து சித்தாந்த இணக்கத்தை புதிதாக உருவாக்கப்படுகின்ற உயர்கல்வி ஆணையம் உறுதிப்படுத்தும். தன்விருப்பத்திற்கேற்றாற் போல, சிறிய அளவிலான சாக்குப்போக்கு காரணங்களைக் காட்டி, அரசாங்கம் வேண்டுமென்றே தான் அளித்து வந்த நிதியை நிறுத்துவதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்குத் தண்டனையை வழங்கி, அவற்றை ஒழுங்குபடுத்துகின்ற அபாயம் உருவாவதை இது மேலும் அதிகப்படுத்தும். மிக முக்கியமாக, பல்கலைக்கழக மானியக் குழு கொண்டிருந்த தன்னாட்சி குறித்த சிந்தனையை இந்த உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா நிராகரித்திருப்பது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களும், பிற உயர் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட வேண்டும் என்ற நிலைக்கு இட்டுச் செல்லவே துடிக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தை மிகக் கடுமையாக பாதிக்கின்ற வகையில் 2018 உயர்கல்வி ஆணையச் சட்டம் இருக்கிறது. தன்னாட்சியுடன் செயல்பட்டு வருகின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான அடித்தளங்களை அழிப்பதாகவும், அந்த நிறுவனங்களின் மீது அரசாங்கத்தின் தலையீட்டைக் கட்டாயப்படுத்துவதாகவும் இந்த மசோதா இருப்பதாகவே நம்ப வேண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பு நமக்கு உறுதிப்படுத்துகின்ற அறிவியல் விழிப்புணர்வு, கேள்வி கேட்பதற்கான உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதே  சிறந்ததாக இருக்கும்.

http://www.kractivist.org/critique-of-draft-higher-education-commission-of-india-bill-2018/

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.