சேலம்,
விவசாய பெண்களின் கனவை பாழாக்கும் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக தமிழக அரசு நிலங்களை அளவீடு செய்து வருகிறது. இதனை கண்டித்தும், விளைநிலங்களை வீணாக்கும் திட்டம் எங்களுக்கு வேண்டாம் என விவசாயிகளும், அப்பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பசுமை வழிச்சாலை அமைப்பதற்காக அரசு நில அளவை செய்துள்ள சேலம் மாவட்டம், பருத்திகாடு பகுதியில் உள்ள சீரிக்காடு, இராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து,  பாதிக்கப்பட்ட பெண் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.இதன்பின் மாதர் சங்க மாநில பொருளாளர் மல்லிகா செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பெண்களையும், பொதுமக்களையும் சந்திந்து, இத்திட்டத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அறியவும் மாதர் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இத்திட்டத்தால் பெரிய விளை நிலங்கள் அழியும் நிலை இங்கு உள்ளது. சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி 90 சதவிகித விவசாயிகள் நிலங்களை கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பொய்யான தகவல் என இப்பகுதி விவசாய பெண்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தங்களின் விளைநிலங்களை அரசு நிலஅளவை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். ஆனால் சட்டசபையில் முதல்வர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார். இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. மேலும், விவசாயிகளின் கருத்துக்களை கேட்க மட்டுமே கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் விவசாயிகளை மிரட்டும் தொனியில் அதிகாரிகள் பேசும் நிகழ்வு நடைபெறுகிறது என பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே, இத்திட்டம் குறித்து முறையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கடந்த காலங்களில் தனியாக தங்களின் விவசாய நிலங்களில் பணியாற்றி வந்த பெண்கள் இன்று பகல் நேரத்தில்கூட வீட்டில் தனியாக இருக்க பயப்படுகின்றனர். தமிழக காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கையே இதற்கு காரணமாகும். நிலங்களை அளவீடு செய்ய வருகிறோம் என பெண்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக இப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதி முழுமையும் விவசாயத்திற்கு அனைத்து அமைப்புகளுடன் பயிர் செய்ய ஏற்ற பகுதியாகும். தென்னை, பாக்கு, மா, வாழை, உணவு தானியங்கள், காய்கறிகள், பூச்செடிகள் உள்ளிட்டு அனைத்தையும் பயிர் செய்து தங்களின் வாழ்வாதார தேவைகளை விவசாயிகள் பூர்த்தி செய்துவருகின்றனர். இன்று அரசின் பசுமை சாலை திட்டத்தால் அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. மேலும் திட்டத்தை மக்களின் கருத்துக்களை கேட்டு நிறைவேற்றும் நிலையில் அரசு இல்லை. மாறாக, மக்களின் கோரிக்கையை அரசு ஏற்கமறுத்து ஜனநாய முறையில் போராடுபவர்களை கைது செய்தல், சிறையில் அடைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அரசின் இந்த செயல்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தரமான விளைநிலங்களை பாழாக்கி உருவாக்க நினைக்கும் எட்டுவழி சாலை திட்டம் இப்பகுதி மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. எட்டுவழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஆய்வின்போது மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சசிகலா, சேலம் மாவட்ட தலைவர் டி.பரமேஷ்வரி, மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் கே.ராஜாத்தி, வெண்ணிலா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, தாலுகா செயலாளர் சுந்தரம், பூபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.