திருவள்ளூர்,
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையால் மகாபலிபுரம் பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எண்ணூர் துறைமுகம் வரை 133.38 கி.மீ தூரத்திற்கு வெளிவட்டச் சாலை அமைக்க ரூ.11 ஆயிரத்து 528 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்துள்ளதால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்யவும், எண்ணூர் துறைமுகத்திற்கு இணைப்பு வழங்கவும், குறிப்பாக துறைமுகத்திற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவும் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை 12 அன்று தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நடைபெற்றது. குடியிருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள்,நீர்நிலைகள் பாதிக்கப்படாமல் சாலைப் பணிகளை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இச்சாலை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்திலிருந்து தச்சூர் வரை 25.11 கி.மீ.தூரம் 100 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்படவுள்ளது. காட்டுப்பள்ளி, வாயலூர், நெய்தவாயல், நந்தியம்பாக்கம், மீஞ்சூர், நல்லூர், அனுப் பம்பட்டு, வன்னிப்பாக்கம், புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில், மாமல்லபுரம் வரை இந்த சாலை அமைக் கப்படவுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 575 ஹெக்டர் நிலமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 226 ஹெக்டர் நிலமும் ஆகமொத்தம் 801 ஹெக்டர் நிலம் எடுக்கப்படவுள்ளது. இதில் 324 ஹெக்டர் நிலம் விவசாய நிலங்களாகும். இதில் நீர்நிலைகள், குடியிருப்புகள், விவசாயம் பாதிப்படையாமல் சாலைபணிகள் அமைக்க வேண்டுமென இந்தகூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தினர். வெளிவட்ட சாலை அமைக்க எந்தெந்த பகுதியில் எந்த சர்வே எண்களில் சாலை அமைக்கப்படும் என்ற எந்த விவரமும் கொடுக்காமல் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜி.சம்பத், சிபிஎம் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன்,விவசாயிகள் சங்கத்தின் வட்டத்தலைவர் பழனி உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துக் களை தெரிவித்தனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக் களை மாநில அரசுக்கு தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறினார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கிருபாநந்தராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.