திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தொடங்கிய ஏறத்தாழ 9 ஆண்டு காலத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களில் 88 ஆயிரத்து 803 பேருக்குமொத்தம் 24 கோடியே 79 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் நலத்திட்ட உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதில் 2017 – 18ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் 7 ஆயிரத்து 333 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 13 லட்சம் நலத்திட்ட உதவித் தொகைகள் அடங்கும். திருப்பூர் மாவட்டம் தோன்றிய 2009ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி முடிய கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் 53 வகையான தொழில்களில் ஈடுபடும் 35,344 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகவும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 60 வகையான தொழில்களில் ஈடுபடும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 827 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகவும், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியத்தில் 3 ஆயிரத்து 909 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகவும் என மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 80 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தொடங்கியதில் இருந்து சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் 17,415 பேர் ரூ.5,71,07,010 பெற்றுள்ளனர். மற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் 71,388 பேர் மொத்தம் ரூ.19 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 842 நலவாரிய பயன் பெற்றுள்ளனர். தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தொழிலாளர் நலவாரியங்களின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000- ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. எனவே இம்மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் நலாரியத்தில் சேர்ந்து பயனடையுமாறு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் சொற்பம்!
மாவட்ட நிர்வாகம் வழங்கியிருக்கும் புள்ளிவிபரப்படி ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு வகையில் நலவாரியப்பலன் பெற்றுள்ளனர். தொழிலாளர்கள் அடர்த்தியாக வாழும் திருப்பூர் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி ஏறத்தாழ 7 லட்சத்து 85 ஆயிரம் பேர் முறைசாரா இதர தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் பேருக்கு மட்டும்தான் நலவாரிய பணப்பலன் கிடைத்திருக்கிறது என்பது 0.001 சதவிகிதம் மட்டுமே! அதாவது ஆயிரம் பேருக்கு ஒருவருக்கு மட்டுமே நலவாரிய பயன் கிடைத்திருக்கிறது.

யானைப் பசிக்கு சோளப்பொறி!
நலவாரியங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் பரிசீலிக்கப்படாமல், பணப்பயன்கள் வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இத்துடன் தொழிற்சங்கங்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ளவும் அரசு நிர்வாகம் பல்வேறு தடங்கள்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தனித்தனியாக வகைப்படுத்தி தொழிலாளர் விபரம், அவர்கள் பெற்ற நிதி போன்றவற்றை வெளிப்படுத்தாமல் மொத்தமாக தொகுத்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருவதாக அரசு நிர்வாகம் மாயத்தோற்றம் காட்டியிருப்பது யாரை ஏமாற்றுவதற்கு என தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். நலவாரிய அலுவலகங்களில் தேங்கிக்கிடக்கும் அனைத்து பணப்பயன் கேட்பு மனுக்களையும்தாமதமின்றி பரிசீலித்து உதவிகளை
வழங்க வேண்டும்.முடங்கிக்கிடக்கும் நலவாரிய செயல்பாட்டை புதுப்பித்து அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் முழுமையாக பயன்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.