பனாஜி:
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சேர்த்தே ஆக வேண்டும்’ என்று கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருக்கும் கின்னஸ் அமைப்புக்கு கடிதம் ஒன்றையும் சீரியஸான முறையில் அவர் எழுதியுள்ளார்.‘அதிக வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் என்ற சாதனைக்காக எங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பரிந்துரை செய்கிறோம்’ என்று தனது கடிதத்தில் சங்கல்ப் அமோன்கர் கூறியுள்ளார்.‘41 பயணங்களில் சுமார் 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட எங்களின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைப்பதில் அதிக மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்; மேலும், இப்பயணங்களுக்காக சுமார் 355 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அவர் செலவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்’ என்று அமோன்கர் குறிப்பிட்டுள்ளார்.

அமோன்கரின் இந்த கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது, நரேந்திர மோடி ஆட்சியின் மோசடிகள் மற்றும் முட்டாள்தனத்தை எடுத்துக்காட்டவும், மோடி இந்தியாவில் இருப்பதை விட அதிக நேரம் வெளிநாடுகளில்தான் இருக்கிறார் என்பதை அவரே உணர்வதற்காகவும்தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்பவர், கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் தனது இடது கை நகத்தை வெட்டாமல் இருந்து, புதன்கிழமையன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: