புதுதில்லி,
மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து வரும் ஜூலை 24 அன்று தேசிய அளவில் தில்லியில் கண்டன முழக்கம் எழுப்பிட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலை பட்டவர்த்தனமாக நடந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமைகளும் அரசியல் சுதந்திரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்துடன்  நாடு முழுதும் தலித்துகள் கொடூரமான முறையில் ஒடுக்கப்படுவதும், மனித உரிமை ஆர்வலர்களுக்க எதிராக கறுப்புச் சட்டங்கள் பாய்வதும் தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனினும், இவை நாட்டில் இடதுசாரி இயக்கத்தின் கோட்டைகளாக விளங்கும் திரிபுராவிலும் மேற்கு வங்கத்திலும் கூர்மையான முறையில் நடந்து கொண்டிருக்கின்றன. திரிபுராவில் ஆளும் பாஜக-ஐபிஎப்டி அரசாங்கத்தின் மூலமாகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மூலமாகவும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவது தொடர்கிறது.

திரிபுரா:
திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் ஜனநாயக வெகுஜன அமைப்புகள் ஆட்சியாளர்களின் குண்டர்களால் குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நால்வர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 100 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடதுசாரிக் கட்சி ஊழியர்கள் தாக்குதல்கள் காரணமாகக் கடுமையாகக் காயங்கள்  அடைந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 750 அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, அல்லது, கைப்பற்றப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் 200 அலுவலகங்கள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன, சுமார் 150 வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. 2100 இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் கோழி/மீன் வளர்ப்பு போன்ற நடவடிக்கைகள் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரப்பர் தோட்டங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களுக்கு ஆளான சுமார் 500 தோழர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து  புலம்பெயர்ந்து, முகாம்களிலும் கட்சி அலுவலகங்களிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இடதுசாரி ஊழியர்கள் தாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இடதுசாரிக் கட்சிகளின் இயக்கங்களும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. மே தினக் கொண்டாட்டம்கூட மாநிலத்தின் பல்வேறு மையங்களில் சீர்குலைக்கப்பட்டது. காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தாக்குதல்களுக்கு ஆளானது. சிபிஎம் நாளிதழான டெயிலி தேசர் கதா குறிவைத்துத்தாக்கப்படுகிறது. அதனை எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் சந்தாதாரர்கள் மிரட்டப்படுகின்றனர்.

திரிபுரா பழங்குடிப் பகுதி சுயாட்சி மாவட்டக் கவுன்சில் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள்   ராஜினாமா செய்திட வேண்டும் அல்லது பாஜகவில் சேர்ந்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நடக்கும் அக்கிரமங்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக்கச் சென்றிடும், கட்சித் தலைவர்கள் காவல்நிலையங்களுக்குள் கூட தாக்கப்படும் நிகழ்வுகளைக் கண்ணுறும்போது எந்த அளவிற்கு மாநில நிர்வாகமும் குண்டர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்றபது நன்கு தெரிகிறது.

மேற்கு வங்கம்:
மேற்க வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியானது தன்னுடைய பயங்கரவாத மற்றும் பாசிஸ்ட் தாக்குதல்களை இடது முன்னணிக்கு எதிராக மேற்கொண்டுவருவது தொடர்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப்பின்னர், திரிணாமுல் காங்கிரஸ், தன்னுடைய வெகுஜனத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக,  இடது சாரிக் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரிக் கட்சிகளுக்க எதிராக தாக்குதல் தொடுப்பது தொடர்கிறது. 2016 ஜூனுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 31 உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் திரிணாமுல் குண்டர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் இடது முன்னணித் தலைவர்கள் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளைக வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் வேலைகளிடும் அது இறங்கி இருக்கிறது. திரிணாமுல் குண்டர்களின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறியிருக்கின்றனர். 2018இல் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைவெறுவதற்கு முன்னரும் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதற்காக, விரிவான அளவில் தாக்குதல்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டு, இடது முன்னணி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவிடாதவாறு தடுத்தனர்.

இவ்வன்முறைகளில் 11க்கும்  மேற்பட்ட இடதுசாரி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். திரிணாமுல் காங்கிரசாரின் குண்டர்களுடன் இணைந்து காவல்துறை கைகட்டி நின்றது. திரிணாமுல் தலைமையிலான மாநில நிர்வாகத்தின்கீழ் நேர்மையான மற்றும் நியாயமான உள்ளாட்சித் தேர்தல்கள் என்பவை சாத்தியமற்றதாக மாறியது. இதன் விளைவாக, மொத்தம் உள்ள 48,650 கிராமப் பஞ்சாயத்து இடங்களில் 16,814ஐயும் 9217 பஞ்சாயத்து சமிதிகளில் 3,059ஐயும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடாமலேயே  கைப்பற்றியது. மேலும், மொத்தம் உள்ள 825 ஜில்லா பரிசத் இடங்களில் 203 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திரிணாமுல் காங்கிரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து இதற்குமுன் எவரும்  கேட்டிருக்க முடியாது. வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்ட இடங்களில் இடது முன்னணிக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப்பதிலாக திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்ததாக வாக்குச்சீட்டுகள்  சேர்க்கப்பட்டன. இவ்வழக்குகள் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஜனநாயகபூர்வமாக மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். பாங்கூர் என்னுமிடத்தில் நிலத்தைக் கைப்பற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் எண்ணற்ற ஊழியர்கள், திரிணாமுல் குண்டர்கள் மற்றும்  காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார்கள். முக்கிய தலைவர்களில் ஒருவர் யுஏபிஏ சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெறும் இத்தகு ஜனநாயகப் படுகொலைக்கு எதிராகவும், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாத்திடவும்,  நாட்டிலுள்ள அனைத்துக் கிளைகளும் கண்டன முழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள், தங்கள் கிளைகளை அறைகூவி  அழைக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீதும்  ஏவப்பட்டுள்ள இத்தகைய பாசிஸ்ட் தாக்குதல்களை முறியடித்திடவும்,  நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் கோரியுள்ளன.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: