திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சிறுவர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் சேருவதற்கு படிவங்களை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பியூலா ஜேன் சுசிலா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர்/ சிறுமியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. அதன்படி, சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகியபகுதியில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி செயல்பட்டு வருகின்றது. அதேபோல், சிறுமியர்களுக்கு சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

இந்த விடுதிகளில், சேருவதற்கு 6, 7மற்றும் 8ம் வகுப்புகளில் பயின்று வரும் சிறுவர், சிறுமியர்களுக்கு இரண்டாவது கட்ட மாநில அளவிலான தேர்வு வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, ஆண்களுக்கான டேக்வோண்டா, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இறகுபந்து போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். அதேபோல், பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்து, தடகளம், இறகுப்பந்து ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே இடங்களில் நடைபெறும். இந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் 2018-19ம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18ம் தேதியன்று காலை 8 மணிக்கு நேரில் சென்று மாநில தேர்வு மையத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பியூலா ஜேன் சுசிலா கூறினார்.மேலும் தகவலுக்கு 0421-2244899, 74017-03515 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

%d bloggers like this: