கோவை மாவட்டம், தடாகம் சாலையில் உள்ள முத்தன்னன் குளம் அமைந்துள்ள 21 ஆவது வார்டு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியமக்கள் வசித்து வருகின்றனர். மழை நீர் வடிந்து செல்வதற்காக இப்பகுதியொட்டிய சாலையில் சுமார் 2 கி.மீ அளவிற்கு இந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கும் மழை நீர் வடிகால் சாலையை விட இரண்டு அடி உயரத்திலும், குடியிருப்புகளின் வாசலை மறைத்து சுமார் நான்கு அடி உயரத்திலும் கட்டப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வழியின்றி சாலையை ஆக்கிரமிப்பதோடு மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வீட்டின் முகப்பை மறைத்து, தரை தளத்தைவிட அதிக உயரத்தில் வடிகால் கட்டப்பட்டதால், தினமும் குனிந்தும், நெளிந்தும் வீட்டிற்குள் சென்றுவர வேண்டியுள்ளது. சாலை உயரமாகி, குடியிருப்பு பள்ளத்திற்குள் சென்று விட்டதால் மழை நாட்களில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பொதுகுழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதற்குக்கூட சிரமம் இருப்பதாகவும், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு பெரும் சிரமப்படுவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் போய் கேட்டால், வீட்டை உயர்த்தி கட்டிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்த இடத்தைக் காலி செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். வளர்ந்து வரும் கோவை நகருக்கான உள்கட்ட மைப்புகளில் மழைநீர் வடிகால் முக்கியமானவைதான். அதே நேரத்தில், அவற்றை பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே கட்டிக்கொடுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. மாறாக, மக்களை தரை மட்டத்திற்கு கீழ் இறக்கி வாழச்சொல்வது அவர்களின் வாழ்நிலையை சீர்குலைக்கும் செயல் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மேலும், பழைய தார் சாலையை பெயர்த்தெடுக்காமல் அதன் மேலே புதிதாக தார் சாலை போடப்படுவதால், அதற்கு ஏற்றார்போல மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கேட்டும் போராடி வரும் எங்களை இந்த நகரப்பகுதியில் இருந்து விரட்டும் முயற்சியாகவே மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய நெருக்கடியை கொடுத்து வருவதாகவும் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.

– டென்னிஸ்.

Leave a Reply

You must be logged in to post a comment.