சென்னை,
அரசு போக்குவரத்து கழகத்தின் பழிவாங்கும்போக்கு, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியமாக நடந்து கொள்வது ஆகியவற்றுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த தயாரிப்புகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் வியாழனன்று (ஜூலை 12) நடைபெற்ற அனைத்து தொழிற் சங்க கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், டிஎம்டிஎஸ்பி, பிடிஸ், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபிள்யுயு உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: வேலை நிறுத்த அறிவிப்பையொட்டி வியாழனன்று (ஜூலை 12) இரண்டாம் கட்ட சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமரசபேச்சுவார்த்தையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள், சட்டத்துறை துணை மேலாளர் மற்றும் அனைத்து கழகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை துவங்கியவுடன் வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி பணி நிலைகள் தொடரும் என அறிவுறுத்தியும், நிர்வாகங்கள் தன்னிச்சையாக பணி நிலைகளில் மாற்றம் செய்து வருகின்றனர். பல கழகங்களில் நடத்துநர் இல்லா பேருந்து இயக்கப்படுகிறது.

திசை திருப்பமுயற்சி:
பழிவாங்கும் அடிப்படையில் ஊர்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி பதவி உயர்வு, பணி ஆய்வு பலன், பணி நிரந்தரம் மறுக்கப்பட்டுள்ளது. நடத்துநர் இல்லா பேருந்துகளை இயக்குவது சோதனை அடிப்படையில்தான் என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் அதிகாரிகள் கூறினர்.மேலும் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு உள்ளது எனக்கூறி பிரச்சனையை திசை திருப்ப முயற்சித்தனர்.

சட்டத்திற்கு புறம்பானது;
மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக நடத்துநர் இல்லாத பேருந்துகளை இயக்குவது சட்டவிரோதமானது. மேலும் பணி நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு உரிய அனுமதி பெறாமல் நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்படுகிறது என்று தொழிற்சங்கங்களின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. நிர்வாகத்தின் நடவடிக்கை முறையற்றது என்றாலும்,பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளதாக கூறி தொழிலாளர் துணை ஆணையர் தனக்குள்ள பொறுப்பை தட்டிக்கழிக்க முயற்சித்தது தவறு என்றும் சுட்டிக்காட்டப் பட்டது.பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த காலத்தில் யாரையும் ஊர்மாற்றுதல் செய்யவில்லை. பணி ஆய்வு பலன் முழுமையாக வழங்குகிறோம். பதவி உயர்வும் வழங்கியுள்ளோம் என அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவலை நிர்வாகத் தரப்பில் தெரிவித்தனர். தொழிற்சங்கங்கள் ஆதாரத்துடன் பேசியதால் வேறு வழியில்லாமல் ஊர்மாறுதல்களை ரத்து செய்யவும், பதவி உயர்வு, பணி ஆய்வு பலன் வழங்கவும் குற்றச்சாட்டுகளை முடிவுக்கு கொண்டுவரவும் ஏற்பாடு செய்வதாக கூறினர்.

கொள்கை முடிவு எப்போது?
தொழிலாளர்கள் பணத்தை எடுத்து செலவு செய்வது, ஓய்வு பெற்றோர் பலன்களை வழங்காமல் இருப்பது வரவுக்கும் – செலவுக்கும் வித்தியாசத் தொகையை வழங்குவது போன்ற விவரங்களும் விரிவாகப் பேசப்பட்டது. இது சம்பந்தமாக கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர். ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி அரியர்ஸ் வழங்கும் போது பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பலருக்கு இரண்டு மாத நிலுவை தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரவுப் பணிபடி, தனி பேட்டா, ஸ்டேரிங் அலவன்ஸ் போன்றவற்றுக்கு அரியர்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அனைத்தையும் பேசி ஒழுங்குபடுத்துவதாக நிர்வாகத்தினர் கூறினர். பேருந்து கட்டண உயர்வுக்கு பின்பு இன்சென்டிவ் மற்றும் பேட்டா தன்னிச்சையாக குறைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தையும் ஜூலை 17 அன்று நடைபெறும் நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில் பேசி இறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அடுத்த பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் பிரச்சனைகளை தீர்க்கும் கண்ணோட்டத்தில் அரசோ, அதிகாரிகளோ வரவில்லை. மேலும், மேலும் பல்வேறு வகைகளில் கழகங்களை சீர்குலைப்பது, தனியார்மயத்தை நோக்கி செல்வது போன்ற நடைமுறைகளே அரசின் திட்டமாக உள்ளது. மறுபுறத்தில் தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் அடிப்படையில் தொடர்ந்து செயல் பட்டு வருகின்றனர்.எனவே, இவை அனைத்தையும் விவாதித்த கூட்டமைப்பு வேலை நிறுத்த தயாரிப்பை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக ஜூலை 19 அன்று அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டங் கள் நடைபெறும். ஜூலை 27ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போராட்டம் சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்படும். பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்கவும், நமது உரிமைகளை பாதுகாக்கவும், தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் பேராதரவு தருவதுடன் கூட்டமைப்பின் போராட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டும். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: