திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே எரகாம்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஐயனார் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தோர் இந்த ஐயனார் சிலையைக் கண்டறிந்ததுடன், அதன் வரலாற்றுப் பின்னணியையும் தெரிவித்தனர். வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் இது குறித்து தெரிவித்த விபரம் வருமாறு: கலித்தொகை பாடலில் “ஐயனைப் பாடுவோம்” என்ற கவிதை வரி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பழந்தமிழ் நாட்டில் ஐயனார் வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்ததை அறியலாம். மேலும் புறநானூற்றிலும் ஐயனார் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழகத்தின் புகழ் வாய்ந்த கி.பி.5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கு அருகில் முதல் பராந்தகன் காலத்தில் ஐயனாருக்கு சிலை அமைத்து வழிபட்ட சிற்பம் இன்றும் உள்ளது.

வணிகர் கடவுள்:
பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தோர் “சாத்துவர்” என்றும், கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தோர் “நாய்கர்” என்றும் அழைக்கப்பட்டனர். வணிகர்கள் வெளியூர் செல்லும்போது தங்கள் பாதுகாப்புக்காக அத்திகோசத்தார் மற்றும் வீரகோசத்தார் என்ற படைகளைக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் பயணம் செய்யும் பெருவழிகளில் ஐயனார் சிலைகளை அமைத்து வணிகச் செழுமை, பாதுகாப்புக்காக வழிபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானதும், சங்க காலத்தில் மேலை நாட்டாருடன் வணிகம் செய்வதற்காக சிறப்பு மிக்க பெருவழியாக “இராசகேசரி” பெருவழி இருந்துள்ளது. தற்போது காணப்படும் எரகாம்பட்டி ஐயனார் சிலை என்பது பண்டைய அந்த இராசகேசரி பெருவழி அருகே அமைந்திருக்கிறது. சங்க காலத்தில் சாத்தன் என வழிபடப்பட்ட இந்த வணிக வளமை தெய்வம் பிற்கால சோழர் காலத்தில் ஐயனார் என பெயர் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

ஐயனார் வடிவம்
எரகாம்பட்டி கிராமத்தில் உள்ள ஐயனார் சிற்பம் 120 செ.மீட்டர் அகலமும், 60 செ.மீட்டர் உயரமும் உடையதாகும். இதில் பீடத்தின் மீது வலது காலை மடித்து வைத்த நிலையில் இருக்கும் ஐயனார் இடது காலைக் குத்திட்டு வைத்து அதன் மீது இடது கையை வைத்தபடியும், வலது கையில் செண்டு ஆயுதம் பிடித்தபடியும் உள்ளார். இது மகாராஜ லீலாசனம் என்றழைக்கப்படும். ஐயனார் தலை ஜடாபாரம் அலங்காரத்தில் அமையப்பெற்றுள்ளது. இடது காதில் பத்ர குண்டலம், வலது காதில் குழை அணிந்துள்ளார். இடுப்பில் உதரபந்தமும், கையின் மேல் பகுதியில் தோள்வளை, கீழ்பகுதியில் சூடகவகை அணிகலன்களும், இடையில் அரைஞான் எனப்படும் கடிசூத்ரம் அணிந்துள்ளார். கால்பகுதி மரவேர்களினால் மறைந்துள்ளதால் ஐயனார் அணிந்திருக்கும் வீரகழல்கள் வெளித் தெரியவில்லை என்று ரவிக்குமார் கூறினார். ஐயனார் கீழ்ப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பூரணை, புஷ்கலை என்ற இரு மனைவியர் உள்ளனர். மேல் பீடத்தில் பக்கத்திற்கு ஒருவராக இரு பணிப் பெண்கள் சாமரம் வீசுகின்றனர்.

வேர்கள் சூழ்ந்த கீழ் பகுதியில் ஐயனாரின் வாகனமான யானை மற்றும் நாய் போன்ற மிருகங்கள் மறைந்துள்ளன. இதைப் பற்றி தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றனாரிடம் கேட்டபோது, சங்க காலத்தில் வீரவணக்கத்தின் அடிப்படையில் தோன்றிய இத்தெய்வ வழிபாடு இன்றும் கிராமங்களில் சிறப்புடன் நடைபெறுகிறது. எரகாம்பட்டியில் இருக்கும் ஐயனார் சிலை அமைப்பின் தன்மையை ஆய்ந்து பார்க்கும்போது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது ஆகும் என்று கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: