சென்னை,
காவிரி டெல்டா பகுதி முழுவதும் உள்ள வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி தண்ணீர் கூடுதலாக தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதே அளவில் தண்ணீர் வந்தால் இம்மாத இறுதிக்குள் அணை நிரம்புவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டாலும் கடைமடைவரை தண்ணீர் சென்று சேருவது சாத்தியமில்லை என்ற நிலையுள்ளது. ஆறுகள் வரத்து வாய்க்கால்களில் புதர்மண்டியும், மண்மேடிட்டும் தண்ணீர் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. எனவே, தமிழக அரசு காவிரி டெல்டா பகுதி முழுவதும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால் கடந்த காலங்களைப் போல் அதிகளவு தண்ணீரை ஓரிரு நாட்களில் திறந்துவிட்டு வீணாகும் நிலைமை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். குறிப்பாக, கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும் வகையிலும், குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: