கோவை,
கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் வழங்கிய மாநகராட்சியை கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 31 ஆம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவது என கோவையில் வியாழனன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாநகர் மாவட்ட பொருப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தபெதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது. 2 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தமால், உள்ளாட்சி பிரதிநிதிகள்யாரும் இல்லாத சூழலில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஏற்பாட்டில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய அடிப்படையான் குடிநீர் விநியோகிக்கும் பொருப்பை பன்னாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகாலம் வழங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 20 ஆம் தேதி முதல் 23 ஆம்தேதி வரை கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் அனைத்துக் கட்சி ஊழியர்களின் தயாரிப்பு கூட்டத்தை நடத்துவது. 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் தொடர்பாக பன்னாட்டு நிறுவனத்துடனான மாநகராட்சியின் ஒப்பந்தத்தின் ஆபத்து குறித்து துண்டறிக்கை விநியோகம் செய்வது.மேலும், ஜூலை 31 ஆம் தேதி கோவை மாநகராட்சி பிரதானஅலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி வலு
வான போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், உக்கடம் மேம்பாலம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வரைபடக் கோளாறு, மக்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எடுத்துக் கூறுவது என முடிவெடுக்கப்பட்டது.

முன்னதாக இக்கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டசெயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மதிமுக சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் இலக்கியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியின் முன்னணி தலைவர்கள் இந்தகூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.