கோயம்புத்தூர்:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, பத்தாண்டுகளுக்கு மேலான சிறைவாசிகளை விடுதலை செய்வது என்கிற தமிழக அரசின் முடிவு முறையாக அமலாகவில்லை. குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் வியாழனன்று கோவை மத்திய சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் வாழ்நிலை குறித்து கேட்டறிந்தனர். சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.நூர்முகம்மது, பொதுச்செயலாளர் பி.மாரிமுத்து, மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன், பொருளாளர் அகமது உசேன் மற்றும் கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்டத் தலைவர் முகமதுமுசீர், பொருளாளர் எஸ்.புனிதா, மாநிலக்குழு உறுப்பினர் இஷ்ராத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்கை நடத்தும் மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகனிடம் வழக்கு குறித்த விபரங்களையும் கேட்டறிந்தனர். பின்னர், மாநில தலைவர் எஸ்.நூர்முகம்மது கூறுகையில், கோவை மத்திய சிறையில் 11 ஆண்டுகளுக்கு மேல் 20 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்த சுமார் 37 முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தோம். இதில் நீண்டகாலமாய் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற முஸ்லிம் சிறைவாசியின் குடும்பத்தினர் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

“எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு கருணை அடிப்படையில், பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனாலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் என்கிற காரணத்தினால் பாரபட்சமான முறையில் சிறையில் இருந்து விடுதலை செய்ய மறுப்பது மனிதத் தன்மையற்றது, நியாமற்றது” என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக கோவை மத்திய சிறையில் 20 ஆண்டுகளக அபுதாகிர் என்கிற சிறைவாசி இரண்டு சிறுநீரகங்கள் செயல்இழந்தும், கடுமையான இதயநோய் காரணமாக உடல் நலிவுற்று உயிருக்கு போராடி வருகிற நிலையிலும் தமிழக அரசு அபுதாகிரை விடுதலை செய்யமல் இருப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி கருணை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய தகுதியுள்ளவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தமிழக முதல்வருக்கு விளக்கமான கடிதம் எழுதுவது எனவும், கடுமையான துன்ப துயரங்களுக்கும், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள முஸ்லீம் சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அரசின் கவனத்தை ஈர்க்க அக்டோபர் மாதத்தில் சென்னையில் மாபெரும் கருத்தரங்கம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.